156 பாதிரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில் 233 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது. இது பால்டிமோர் கத்தோலிக்க சபையின் தலைமை சர்ச் ஆகும். இதன் கீழ் 153 சர்ச்சுகள், 59 பள்ளிகள், 24 பாதிரி பயிற்சி பள்ளிகள், 26 கன்னியாஸ்திரி பயிற்சி பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றும் பாதிரிகள் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக மேரிலேண்ட் மாகாண அரசு வழக்கறிஞர் அந்தோணி பிரவுன், கடந்த 2018ம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அந்தோணி பிரவுன் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமானத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், கடந்த 1940ம் ஆண்டு முதல் பால்டிமோர் தலைமை சர்ச் மற்றும் அதன் கீழ் செயல்படும் சர்ச்சுகள் மற்றும் பள்ளிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு விசாரணையில், 156 பாதிரிகள், சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் சர்ச் நிர்வாகம் அனைத்து தவறுகளையும் மூடி மறைத்துள்ளது. மத ரீதியான ஆலோசனைக்கு வந்த சிறுவர், சிறுமிகளையும் பாதிரிகளின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த சிறுவர், சிறுமிகளை, பாதிரிகள் மிரட்டி உள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவித்த சில பெற்றோரையும் மிரட்டியுள்ளனர். கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் இதை குறித்து நன்றாக தெரிந்திருந்தும் சம்பந்தப்பட்ட பாலியல் பாதிரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசுத் தரப்பு விசாரணையில் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட 156 பாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் உண்மையில் தவறிழைத்த பாதிரிகளின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கக்கூடும். பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகமாக இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தவறிழைத்த பாதிரிகள் உயிரிழந்துவிட்டாலும், அவர்களால் பாதிக்கப்பட்டோர் துணிச்சலாக புகார் அளிக்கலாம். அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று அந்தோணி பிரவுன் அறிவித்துள்ளார். இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரிகளில் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். தற்போது சிலர் மட்டுமே உயிரோடு உள்ளனர். அவர்கள் நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று பால்டிமோர் நீதிபதி டெய்லர் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “பால்டிமோர் கத்தோலிக்க திருச்சபை பாதிரிகள் மட்டுமன்றி ஏராளமான கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த பாதிரியார்கள் சிறுவர், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். கடந்த 1950 முதல் 2018ம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்களின்படி சுமார் 7,002 பாதிரிகளை குற்றவாளிகளாக கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பாதிரிகள் மீதான பாலியல் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாரதத்திலும் இதுபோன்ற பாலியல் பாதிரிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும், இது குறித்த தகவல்கள், கிறிஸ்தவ நிறுவனங்களாலும் ஊடகங்களாலும் சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்களாலும் அழுத்தம், வாக்குவங்கி அரசியல் போன்ற காரணங்களால் மூடிமறைக்கப்படுகின்றன என்பது தான் யதார்த்தம்.