சுவாமி விவேகனந்தர் பாரத தத்துவ ஞானங்களை உலகறிய செய்த மகான். அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் ‘சகோதரர்களே சகோதரிகளே’ என்ற தனது ஒரே வார்த்தையால் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் கட்டிப்போட்டவர். அந்த மாநாட்டில், உலக சமயங்களுக்கு எல்லாம் தாயான, ஹிந்து சமயத்தின் பிரதிநிதி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று பேசினார். அதுவரை பாரதத்தை சேர்ந்தவர்கள் என்றால் நாகரிகம் தெரியாதவர்கள், காட்டுமிராண்டிகள் என்ற கண்ணோட்டத்தில் இருந்த அமெரிக்கர்களை, நல்ல தத்துவ ஞானத்தை கொண்டது பாரதம் என்ற நிலைக்கு மாற்றியவர் சுவாமி விவேகானந்தர் சுவாமிஜி கல்கத்தாவில் 1863ல் தந்தை விஸ்வநாத தத்தருக்கும் தாய் புவனேஸ்வரி மாதவுக்கும் மகனாக பிறந்தார்.
இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சுவாமி விவேகானந்தர் எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர். ஆன்மிக தாகம் கொண்ட சுவாமிஜி, பலரிடம் கேட்டதுபோல ராமகிருஷ்ண பரமஹம்சரையும் ‘நீங்கள் கடவுளை கண்டதுண்டா, உங்களால் எனக்கு கடவுளை காட்டமுடியுமா?’ என்று கேட்டார். அதற்கு ‘ஆம் மகனே நான் கடவுளை கண்டுஇருக்கிறேன், உனக்கும் காட்டுகிறேன்’ என்று சொல்லி கடவுளை உணரவைத்த பின்னரே அவருக்கு சீடரானார் சுவாமிஜி.
ராமகிருஷ்ணரின் ஆசிரமத்தில் இணைந்து துறவற தீட்சை பெற்ற பின்னர், நாடு முழுவதும் யாத்திரையை தொடங்கினர். கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு கடல் நடுவே இருந்த பாறையில் மூன்று நாட்கள் நாட்டின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து தவம் செய்தார். அவரை சென்னையை சேர்ந்த ஆன்மிக அன்பர்கள், சிகாகோவில் நடைபெறும் சர்வ சமய மாநாட்டில் கலந்துகொள்ள செய்தனர் . அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பாரத தத்துவ ஞானங்களையும் பாரதத்தின் ஆன்மிக சிறப்புகளையும் உலகறிய செய்தார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் இன்று.
– சிவராகவி, பெரம்பூர், சென்னை