144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காவிரி மகா புஷ்கரம்: காவிரி அன்னை அழைக்கிறாள்!

பாரத மக்கள் தட்சிண கங்கையாக போற்றும் காவிரி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை விசேஷமாக கொண்டாடப்படும் ‘மஹா புஷ்கர விழா’ இந்த ஆண்டு வருகிறது. செப்டம்பர் 12 முதல் 24 வரை காவேரி ஆதி புஷ்கரம் என்றும் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 7 வரை அந்திம புஷ்கரம் எனவும் அழைக்கப்படுகிறது. காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆக்ஞையின்படியும் சைவ ஆதீனகர்த்தர்களின் வழிகாட்டுதல்களின் படியும் மயிலாடுதுறையிலும், வைணவ ஆச்சார்யர்களின் வழிகாட்டுதல்களுடன் ஸ்ரீரங்கத்திலும் புஷ்கர விழா நடைபெறுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது இந்த மாபெரும் வழிபாடு! நாம் வாழும் காலகட்டத்தில் இந் நிகழ்வு வருவது நமக்கு ஒரு பெரிய பாக்கியம். காவிரியில் புனித நீராடி வாருங்கள்… உங்கள் அனுபவங்களை விஜயபாரதத்திற்கு எழுதுங்கள்…

குருபகவான் கன்னி ராசியில் இருந்து, துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது, காவிரி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியதாகும். ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்கு இடம் பெயருகிறார். இதுவே குருப்பெயர்ச்சி எனப்படுகிறது. குரு எந்த ராசிக்கு இடம் பெயருகிறாரோ, அந்த ராசிக்குரிய நதிக்கு, அந்த சமயத்தில்  புஷ்கர புண்ணிய காலம் வருகிறது. (ஒவ்வொரு ராசிக்கும் உரிய  நதிகள் பட்டியல் ‘பார்க்க பெட்டி செதி’). இந்த ஆண்டு வரக்கூடிய காவிரி புஷ்கரமானது, பன்னிரண்டு புஷ்கரத்திற்கு பிறகு வரக்கூடிய, அதாவது (12 து 12 = 144 )  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மஹா புஷ்கரம் ஆகும்.

பன்னிரண்டு ராசிகளில், துலாம் ராசிக்குரிய நதியாக காவிரி போற்றப்படுகிறது. ஆகவேதான் ஒவ்வொரு துலா மாதத்தில்  (ஐப்பசி) முப்பது நாட்களும் காவிரியில் நீராடுதல் என்பது, காலம் காலமாக ஹிந்துக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் கால்கள் ஊனமான ஒருவர், தவழ்ந்து தவழ்ந்து காவிரியை அடைந்த போது,  ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை பிறந்து விடுகிறது. சரியான நேரத்தில் தன்னால் காவிரியில் நீராட முடியவில்லையே என, இறைவனிடம் முறையிடுகிறார், அவருக்காக மனமிறங்கிய  இறைவன், கார்த்திகை முதல் தேதியன்று காவிரியில் நீராடினாலும், துலாம் மாதத்தில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என அருள்கிறார். கால்களை இழந்த முடவனின் வரத்தால், கிடைத்த பலன் என்பதால், அதற்கு ‘முடவன் முழுக்கு’ என்றே பெயர் வழங்கப்பட்டது.

புஷ்கரம் என்பதே நீர்நிலைதான்

புஷ்கரம்  என்கிற சம்ஸ்கிருத சோல்லுக்கு, வருணபகவானின் அம்சம், தாமரை, நீர்நிலைகள், பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய புண்ணியகாலம் போன்ற பல அர்த்தங்கள் இருப்பினும், பொதுவாக ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளை புஷ்கரம் என்று அழைப்பர். புஷ்கரன் என்னும் ஒரு ரிஷியின் பெயரே, பின்னாளில் புஷ்கரம் என்கிற சோல் வருவதற்கு காரணமாயிற்று.

தந்திலன் என்னும் ஒரு ரிஷி மிகச்சிறந்த தவசீலர், நீண்ட நாட்களாக சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இவரது தவத்தை மெச்சிய சிவபெருமான், ரிஷியின் முன்னே தோன்றி, தன்னுடன் எப்போதும் உடனிருக்கும் அஷ்டமூர்த்திகளில் ஒருவராகிய, நீரின் அதிபதியாகிய ஜலமூர்த்தியை, ரிஷிக்கு வழங்கினார். நீரின் அதிபதியே இவருக்கு கிடைத்ததினால், மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியானார் தந்தில ரிஷி.

தண்ணீர் அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்குவதால், அனைத்து ஜீவராசிகளும் தந்தில ரிஷியை போற்றி துதித்தன. அனைவரையும் வாழவைக்கும் இத்தகைய சிறப்பானவர்களை சமஸ்கிருதத்தில் ‘புஷ்கரன்’ என்று அழைப்பார்கள். ஆகவே தந்தில மகரிஷிக்கு   புஷ்கரன் என்கிற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

உலகை படைத்திடும் கடவுளான பிரம்மா, ஜலதேவதைகள் தன்னிடம் இருப்பது சிறப்பாக இருக்கும் என்று கருதி, சிவபெருமானிடம் வரம் கேட்டார். நல்ல நோக்கத்திற்காக பிரம்மா கேட்பதால், சிவபெருமானும் மகிழ்ந்து, மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய  புஷ்கரனை அவரது சம்மதத்துடன் பிரம்மாவுக்கு வழங்கினார். பிரம்மாவின் வசமாகிய புஷ்கரன், பிரம்மாவின் தீர்த்த கமண்டலுத்தினுள் ஐக்கியமானார். பிறகு ஒருமுறை, பிருஹஸ்பதியாகிய குருபகவான், உலக உயிர்களை காத்திடும் பொருட்டு, புஷ்கரனை தன்னுடன் கொடுத்து விடுமாறு, பிரம்மனிடம் கேட்டார். ஆனால் புஷ்கரனோ பிரம்மாவை விட்டு பிரிந்திட மனமில்லாமல், தான் நிரந்தரமாக குருபகவான் வசம் செல்ல மறுத்து விட்டார். உடனே பிரம்மா, குருபகவான், புஷ்கரன் ஆகிய மூவரும் சேர்ந்து பேசி ஒரு சமரச தீர்வு கண்டார்கள். அந்த சமரச தீர்வின் படி, குருபகவான் பன்னிரண்டு ராசிகளில், எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கரன் வாசம் செய வேண்டும் என முடிவாயிற்று.

மேஷ ராசியில் குருபகவான் சஞ்சரிக்கின்ற காலத்தில், முதல் பன்னிரண்டு நாட்களுக்கு, மேஷ ராசிக்குரிய கங்கை நதியில் புஷ்கரன் வாசம் செவார். அந்த சமயத்தில் அந்த நதியில், பிரம்மா சிவன் திருமால் ஆகிய மும்மூர்த்திகளும், சரஸ்வதி, பார்வதி, திருமகள் ஆகிய முப்பெருந்தேவியரும் அஷ்டதிக் பாலகர்கள் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் உலகில் உள்ள மூன்றரை  கோடி புண்ணிய தீர்த்தங்களும் கங்கை நதியில் வாசம் செகிறார்கள். மேலும் புஷ்கரனை வரவேற்றிட சப்த ரிஷிகளும் அங்கு வருகிறார்கள். ஆகவே புஷ்கர காலத்தில், குறிப்பிட்ட நதியில் நீராடும்போது, உலகில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனும் அஸ்வமேத யாகம் செத புண்ணியமும் கிடைக்கிறது.

குருபகவான் துலாம் ராசிக்கு செப்டம்பர் 12 அன்று பெயர்ச்சியாகிறார். ஆகவே துலாம் ராசிக்குரிய காவிரி நதியினில் புஷ்கரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செதிட உள்ளார்கள். அந்த சமயத்தில் காவிரியில் நீராடுவது அளவற்ற புண்ணியத்தை தரவல்லது. கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில்,  தலைக்காவிரி என்ற இடத்தில்  உற்பத்தியாகி, தான் பாயும் இடமெல்லாம்,  பசுஞ்சோலைகளை உருவாக்கி, அவற்றை விரித்துச் செல்வதால் காவிரி என்றும், நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் வடகரை திருத்தலங்கள், தென்கரை திருத்தலங்கள் என பல சிவாலயங்களை கொண்டிருப்பதனால், தென்பாரத கங்கை எனவும் பல்வேறு பெயர்களால் வழங்கப்பெற்று, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் பசி போக்கிடும், அன்னபூரணியாகிய காவிரி அன்னை, காவிரி பூம்பட்டினம் என்று வரலாற்றில் அழைக்கப்பெறும் பூம்புகார் மண்ணில் வங்காள விரிகுடா என்னும் கங்கா சாகரில் சங்கமம் ஆகி, தனது நீண்ட நெடிய பயணத்தை நிறைவு செகிறாள். புகழ்பெற்ற காவிரி அன்னையை வணங்கி, நம்முடைய வருங்கால இளைய தலைமுறைக்கு, புனிதமிகு காவிரியை, தூமையான காவிரியாக வழங்கிட சபதம் ஏற்போம்.

 

 

ராசி  நதி

மேஷம்  :     கங்கை

ரிஷபம்  :     நர்மதை

மிதுனம் :     சரஸ்வதி

கடகம்   :     யமுனை

சிம்மம்  :     கோதாவரி

கன்னி   :     கிருஷ்ணா

துலாம்  :     காவிரி

விருச்சிகம்    :     தாமிரபரணி

தனுசு   :     சிந்து

மகரம்   :     துங்கபத்திரா

கும்பம்  :     பிரம்ம்புத்திரா

மீனம்   :     பிரணீதா

 

 

வளைந்து செல்லும் காவிரி!

வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி, ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தின் முன்பு , ட வடிவத்தில் வளைந்து, அதாவது கிழக்கு நோக்கி பாகிறாள். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் கொடுமுடி ஆலயமும் ஒன்று.

ஆடு தாண்டும் காவிரி!

கர்நாடக தமிழக எல்லைப்பகுதிகளில், குறிப்பாக ஒகேனக்கல்லுக்கு முன்பாக ஆழமான குறுகிய பாறைகளுக்கிடையே, ஒரு ஆடு தாண்டும் அளவுக்கு குறுகி ஓடி வருகிறாள் காவிரி, இந்த இடத்தை ‘மேக்கதாது’ என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். மேக்கதாது என்பதற்கு  ‘ஆடு தாண்டுவது’ என்பது பொருளாகும்.

அகண்ட காவிரி!

கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் எல்லையில் மிகவும் அகலமாக விரிந்து பரவி,  ‘அகண்ட காவிரியாக’ பரிமளிக்கிறாள் காவிரி அன்னை.

 

 

காவிரிக்கு நடுவே நட்டாற்றீஸ்வரர் ஆலயம்

ஈரோடு மாவட்டம் காங்கேயன்பாளையம் ஊரின் கிழக்கு புறத்தில், ஓடும் காவிரியின் நடுவே நட்டாற்றீஸ்வரர் ஆலயம் உள்ளது. காவிரியின் இரண்டு கரைகளுக்கு நடுவே உள்ளதால், நட்டாற்றீஸ்வரர் கோயில் என்று பெயருள்ளதாக பலர் நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அதுமட்டுமே உண்மையல்ல. குடகு முதல் பூம்புகார் வரையிலான ஒட்டுமொத்த காவிரி நதியின் (800 கி.மீட்டரில்) மத்திய பகுதியில்தான், அந்த கோவில் அமைந்துள்ளது. ஆகவேதான் அந்த இடத்தில் அகத்தியர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செது வழிபாடு செதுள்ளார். காவிரியின் மத்தியில் உள்ளதால், இத்தலத்து இறைவனது திருநாமம் மத்யபுரீஸ்வரர் என வழங்கப்படுகிறது. உலக வரலாற்றிலேயே, பன்னெடுங்காலத்திற்கு முன்பே, ஒரு நதியின் மத்திய பகுதியை, பாரத ரிஷிகள் அறிந்து, அந்த இடத்தில் இறைவனுக்கு ஆலயம் அமைத்து  சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

 

 

 

காவிரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள்

கர்நாடகா

தலைக்காவேரி

பாகமண்டலா

குஷால் நகர்

ஸ்ரீரங்கப்பட்டினம்

கிருஷ்ணராஜ் சாகர் அணை

மாண்டியா

ஷிவனசமுத்திரா

பன்னூர்

திருமாக்குடல் நரசிபுரா

தலக்காடு

முடுகுத்தூர்

கனகபுர்

தமிழ்நாடு

மேட்டூர்

பவானி

பள்ளிப்பாளையம்

கொடுமுடி

பரமத்தி வேலூர்

ஸ்ரீரங்கம்

திருவையாறு

தஞ்சாவூர்

சுவாமிமலை

கும்பகோணம்

மயிலாடுதுறை

மருதூர் அக்ரஹாரம்

பூம்புகார்

 

 

தென்பாரத  திரிவேணி சங்கமம்!

மேட்டூரிலிருந்து புறப்பட்டு,  ஈரோடு மாவட்டத்தில் நுழையும் காவிரியுடன், பவானி கூடுதுறை என்னுமிடத்தில், நீலகிரி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் பவானி  நதி, அந்தர்வாஹினியாக உள்ள அமுதா நதி ஆகிய நதிகள் சங்கமிக்கிறது. மூன்று புனித நதிகள் அந்த இடத்தில், சங்கமிப்பதால் அங்குள்ள சிவபெருமானுக்கு சங்கமேஸ்வரர் என்னும் திருநாமம் வழங்கப்படுகிறது. பவானி கூடுதுறைக்கு, ‘தென்பாரத  திரிவேணி சங்கமம்’ என்ற பெயரும் உண்டு.