தமிழகத்தில் மின் கட்டண உயர்வு என்பது பொதுமக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும் சூழலில், பா.ஜ.க ஆளும் ஹிமாச்சல பிரதேச முதல்வர் எடுத்த முயற்சியின் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மின் நுகர்வோர் மின் கட்டணம் கட்டத் தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சமீபத்தில் அம்மாநிலத்தில் உள்ள மின்சார நுகர்வோர் அனைவருக்கும் மாதம் 125 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹிமாச்சல பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், “எங்கள் மாநிலம் தற்போது தேவைக்கு அதிகமாக உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. மொத்தம் 24,567 மெகாவாட் மின்சாரம் நாங்கள் தயாரித்து வருகிறோம். அதில் 11,138 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2030ம் ஆண்டுக்குள் 10,000 மெகாவாட் கூடுதல் மின் ஆற்றலைப் பயன்படுத்த எங்கள் மாநிலம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் 1,500 முதல் 2,000 மெகாவாட் வரை சூரிய சக்தி மின்சாரமாக இருக்கும். நீர் மின் திட்டங்கள் மட்டுமின்றி சூரிய ஒளி, காற்றாலை மற்றும் ஹைபிரிட் கம் பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டங்களை உருவாக்குபவர்களை அரசு ஊக்குவிக்கிறது. மாநில அரசின் இந்த முயற்சிகள் காரணமாக எங்கள் ஆட்சிக் காலத்தில் 24 நீர்மின் திட்டங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால், எங்கள் மாநிலம் ‘பவர் ஸ்டேட்’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மின் நுகர்வோருக்கு 125 யூனிட் மின்சாரம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலத்தில் உள்ள மொத்த நுகர்வோர் எண்ணிக்கையான 22,59,645 பேரில் 14,62,130 பேர் 125 யூனிட் மட்டுமே பயன்படுத்துவதால் அவர்கள் மின் கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அவர்கள் பட்ஜெட்டில் மாதம் தோறும் ரூ. 600 சேமிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என கூறியுள்ளார்.