மேற்கு வங்க மாநில அரசு, கடந்த சில ஆண்டுகளாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில், விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகளின் தற்கொலைகள் பூஜ்ஜியமாக இருப்பதாகவும் கூறி வருகிறது. 2021ல் மேற்கு வங்கத்தில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்த தகவல் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) கேள்விக்கு மேற்கு வங்க அரசு அளித்த புள்ளி விவரங்கள் சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக சட்ட ஆய்வாளரும் ஆர்.டி.ஐ ஆர்வலருமான பிஸ்வநாத் கோஸ்வாமியின் கேள்விக்கு, மேற்கு வங்க அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் மட்டும் 2021ம் ஆண்டில் விவசாயத் துறையுடன் தொடர்புடைய 122 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் 2022ல் இதுவரை 34 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள கட்டல் பகுதியில்தான் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் மற்றும் விவசாயத்தை சார்ந்து தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு மொத்தம் 63 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 13 பேர் விவசாயத்தை நம்பி தற்கொலை செய்துள்ளனர். இதைத்தவிர, கோல்டோரில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை கடந்த ஆண்டு 14 ஆக உயர்ந்தது, இந்த ஆண்டு இதுவரை ஐந்து பேர் அப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனந்தபூர் பகுதியில் கடந்த ஆண்டு 10 பேரும், இந்த ஆண்டு இதுவரை இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேஷ்பூர் பகுதியில் கடந்த ஆண்டு விவசாயத்தை நம்பி 8 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு அந்த பகுதியில் விவசாயத்தை நம்பியிருந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.