ஹிந்து முன்னணி மாநில பொதுக் குழு கூட்டம், 2016 செப்டம்பர் 24, 25 தேதிகளில் திருப்பூர் வித்யா கார்த்திக் கல்யாண பண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் உள்பட 1251 பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில:
* காவிரிப் பிரச்சினைக்காக ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை சில தேச விரோத அமைப்புகள் முற்றுகையிட்டன. ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்களின் அமைப்பு, மக்களுக்காக சேவை செய்யும் அமைப்பு, அரசியல் சாராத அகில பாரத கலாச்சார அமைப்பு என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். காவிரிப் பிரச்சினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் என்ன சம்பந்தம்? ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் அமைப்பு. மாநிலத்திற்கு மாநிலம் ஒரு நிலைப்பாடு எடுக்காத தேசபக்த அமைப்பு, பாரதம் ஒரே நாடு, மக்கள் அனைவரும் ஒன்று என்று செயல்படும் அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். கன்னட மக்களை தூண்டிவிட்டார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்ய நினைக்கும் இந்த தேச விரோத, ஹிந்து விரோத சக்திகளை மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும்.
* ஹஜ் யாத்திரைக்கான நிர்வாக மானியம் ரூ. 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாகவும் வக்ப் வாரியத்தை நிர்வகிக்க மானியத்தொகை 45 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாயாகவும், ‘உலேமா’க்களின் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ. 1500ஆகவும் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதே போல் கிறிஸ்தவ ‘சர்ச்’களை பராமரிக்கவும், சீரமைக்கவும் சர்ச் ஒன்றிற்கு ரூ. 3 லட்சம் வரை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி அனைத்தும் பெரும்பான்மை ஹிந்துக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது.
ஆண்டுக்கு 5 கோடி வரை மட்டுமே அரசின் சலுகைகள் ஹிந்துக் கோயில்களுக்கு ஒதுக்கப்படுமானால் 1000 கோடி ரூபாய் வருமானத்தில் மீதிப்பணம் எங்கே போகிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சர்ச், மசூதிகளுக்கு எப்படி பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படுகிறதோ அதேபோல் ஹிந்துக்கோயிலுக்கும் பொது நிதியில் இருந்தே தொகையை ஒதுக்கீடு செய்து, இந்த அரசு அனைவருக்கும் பொதுவான அரசு என்பதை நிரூபித்திட வேண்டும்.
* தமிழக சிறைகளில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற விசாரனைக் கைதிகளாகவும் இருந்துவரும் இஸ்லாமிய குற்றவாளிகள் சிறைகளில் இருந்துகொண்டே மொபைல் போன் உள்பட எல்லா வசதிகளையும் மிக சுதந்திரமாக உபயோகித்து வருவதாக அறிகிறோம். உதாரணம், சென்னை அருகே கேளம்பாக்கத்தில் வெடிபொருட்களுடன் 5 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அதில் முஸ்லிமாக மதம்மாறிய சுரேஷ் என்பவர் மூலம் வெடிபொருள் வாங்கி கொடுக்கின்ற செயலில் ஈடுபட்ட இவர்களை பாடி சுரேஷ் கொலைவழக்கில் கைதானவர்கள் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தமிழகத்தின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உடனடியாக ஜாமர் கருவி பொருத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரையும், ஊக்குவிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.