114 போர்விமானங்கள்

இந்திய விமானப்படைக்காக 1.5 லட்சம் கோடி செலவில் புதிய 114 விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதில் 18 விமானங்கள் நேரடியாக வாங்கப்படும். மீதமுள்ள 96 விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விமான நிறுவனத்துடன் ஒரு உள்நாட்டு நிறுவனம் இணைந்து இந்த புதிய விமானங்களை தயாரிக்கும். முதற்கட்டமாக 18 விமானங்கள் நேரடியாக பெறப்பட்ட பிறகு, முதல் தொகுதி 36 விமானங்கள் பாரதத்தில் தயாரிக்கப்படும். இதற்கான தொகை பாரத மற்றும் வெளிநாட்டு பணத்தில் அளிக்கப்படும். அதன் பிறகு தயாரிக்கப்படும் 60 விமானங்களுக்கான பணம் நமது நாட்டு ரூபாய் மதிப்பில் மட்டுமே செலுத்தப்படும். போயிங், லாக்ஹீட் மார்ட்டீன், சாப், மிக், இர்குட், டசால்ட் உள்ளிட்ட போர் விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கான டெண்டர் அட்டவணையில் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில், இந்திய விமானப்படை மேலும் 73 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை 43 புதிய மேம்பாட்டு வசதிகள், 10 பயிற்சி தொகுப்புகளை தயாரித்து வழங்க ரூ. 46,898 கோடிக்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்தியது நினைவு கூரத்தக்கது.