தமிழகத்தில் 100 மின்சார வாகனங்களை விற்பனை செய்து, ‘வால்வோ கார் இந்தியா’ நிறுவனம் புதிய உச்சத்தை எட்டிஉள்ளது. கடந்த நவம்பர் 2022ல், டெலிவரி துவங்கியதில் இருந்து, வால்வோ கார் இந்தியா நிறுவனம், அதன் அனைத்து மின்சார வாகன பிரிவில் 100க்கும் மேற்பட்டவற்றை தமிழகத்தில் டெலிவரி செய்து உள்ளது.
சென்னை, 53 டெலிவரிகளுடன் வால்வோ மின்சார வாகனங்களின் மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது. நிறுவனம், அதன் முதல் முழு மின்சார மாடலான ‘எக்ஸ்.சி., 40 ரீசார்ஜ்’ மாடலில் 86 வாகனங்களையும், 62 லட்சம் ரூபாய் ‘சி40 ரீசார்ஜ்’ மாடலில் 14 வாகனங்களையும் டெலிவரி செய்துள்ளது.
இதுகுறித்து, வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளதாவது: தமிழகம் எங்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. இங்கு எங்கள் மின்சார வாகனங்களுக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. மாநிலத்தின் மேம்பட்ட வாடிக்கையாளர்கள், புதிய தொழில்நுட்பங்களை ஏற்று கொண்டுள்ளதை இது பிரதிபலிக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதிய மின்சார வாகன மாடலை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டில், உறுதியாக உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து, வால்வோ தமிழ்நாடு இயக்குனர் விஷ்ணுவர்தன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது: தமிழக வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் 11 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறோம். புதிய வால்வோ கார் மாடலை நாங்கள் அறிமுகப்படுத்தும் போதெல்லாம், இங்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது.
அதே வரவேற்பு வால்வோவின் மின்சார வாகனங்களுக்கும் கிடைத்துள்ளது. தமிழகத்தில் விற்கப்படும் வால்வோ கார்களில், 40 சதவீதத்திற்கும் அதிகமானவை மின்சார வாகனங்களாக உள்ளன. 2024ம் ஆண்டில், மேலும் அதிக டெலிவரிகளையும், புதிய மைல்கல்களையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.