பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியான அனந்த் சிங், மொகாமா தொகுதியில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளார். கடந்த 2019ல் அனந்த்சிங்கின் சொந்த கிராமமான நத்வானில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 32 குண்டுகள், ஏகே 47 துப்பாக்கி, 2 கண்ணி வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதனால், அவர் மீதும் அவருக்கு நெருக்கமானவரான சுனில் சிங் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அனந்த்சிங் பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், அனந்த்சிங், சுனில் சிங் ஆகியோருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் சட்டத்தின்படி 2 வருடங்களுக்கும் அதிகமான தண்டனை பெற்றதால் அனந்த் சிங்கின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக அனந்த்சிங் தெரிவித்துள்ளார். இதைத்தவிர மேலும் 4 கிரிமினல் வழக்குகளும் அனந்த் சிங் மீது, பிஹாரின் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது.