பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை 2019ல் மத்திய அரசு கொண்டுவந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அதில் பி.பர்திவாலா, பேலா திரிவேதி, தினேஷ் மகேஸ்வரி ஆகிய மூன்று நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் நீதிபதிகள் யு.யு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். 3:2 என்ற வீதத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றியாகவே கருதப்படுகிறது. 5ல் 3 பேர் செல்லும் எனக் கூறியதால் இந்த சட்டம் செல்லத்தக்காகியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு லலித் எனப்படும் உதய் உமேஷ் லலித்தின் பணிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இன்று குருநானக் ஜெயந்தியையொட்டி உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடைசியாக நேற்று பணியாற்றி இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். இதையொட்டி அவர் தலைமையில் கூடும் சிறப்பு அமர்வின் நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தின் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.