தமிழக நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அந்த நிலங்களை வீட்டு மனையாக ஒதுக்க அரசு முடிவு செய்தது. இதற்காக, 1977ல் சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், 1988ல் தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் துவக்கப்பட்டது.
இதில், மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்தி முடித்த நிலையில், அவர்களுக்கு தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் விற்பனை பத்திரம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், இத்திட்டத்துக்கு பயன்படுத்திய நிலங்களின் உரிமையை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
அதனால், இத்திட்ட பயனாளிகளில் பெரும்பாலானவர்கள் விற்பனை பத்திரம் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னையில் தீர்வு ஏற்படுத்த, நிர்வாக ரீதியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இத்திட்ட பகுதிகளில் முறையான ஒதுக்கீட்டு ஆணையின்றி புதிதாக குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கும் விற்பனை பத்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றுக்கான பகுதிகளில், புதிதாக மக்கள் குடியேறி உள்ளனர். இவர்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, இத்திட்ட பகுதிகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்த குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்படும். இதன் அடிப்படையில் தகுதி உள்ள குடும்பங்களை ஒதுக்கீட்டாளர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க ஆய்வு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.