ஹிந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியோரை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, போத்தனுார், எம்.ஜி.ஆர்., நகர், மூன்றாவது வீதியை சேர்ந்தவர், ஆனந்த நாராயணன், 35; ஹிந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர்.இவர், நேற்று முன்தினம், காந்திபுரம் பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடந்து வரும் தொடர் போராட்டத்தில் பங்கேற்றார்.
இரவு, இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.நஞ்சுண்டாபுரம் அருகே சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து, இரும்பு கம்பியால், அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்தவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.தகவலறிந்த, ஹிந்து முன்னணியினர், 500க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், தாக்குதல் நடத்தியோரை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஹிந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதால், கோவையில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, மாநகரம் முழுவதும், பாதுகாப்பு பணியில், 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட இடங்களில் அதிவிரைவு படையினர், துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.