”ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.,வினர் தினமும் பேசி வருகின்றனர். அவர்கள் ஹிந்து மதத்தை கைவிட்டுவிட்டனரா? அப்படியானால் அவர்கள் அந்த மதத்தை பற்றி தவறாக பேசக்கூடாது,” என, ‘இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஐ.பி.சிங் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி, சனாதன தர்மம் குறித்து பேசியது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக, தருமபுரியை சேர்ந்த தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், லோக்சபாவில் சமீபத்தில் பேசும்போது, சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்ற மூன்று ஹிந்தி பேசும் வட மாநிலங்களை, ‘கோ மூத்ர’ மாநிலங்கள் என, விமர்சித்தார்.
இது வட மாநில அரசியல் தலைவர்களை ஆத்திரமடைய செய்தது. இறுதியில் பா.ஜ., – எம்.பி.,க்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்த செந்தில்குமார், லோக்சபாவில் நேற்று முன்தினம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், உத்தர பிரதேச முன்னாள் அமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் நெருங்கிய நண்பருமான ஐ.பி.சிங் கூட்டம் ஒன்றில் நேற்று பேசியதாவது:
முஸ்லிம் மதத்தை பற்றி யாராவது இழிவாக பேசினால், அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற களம் இறங்குகின்றனர். அதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்யக்கூட அவர்கள் தயங்குவதில்லை.
அதே நேரம், சில ஹிந்துக்கள் அவர்களின் கடவுள்களையும், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களை கேலி பேசுவதையே தினசரி வழக்கமாக வைத்துள்ளனர்.
குறிப்பாக தி.மு.க., தலைவர்கள் ஹிந்து மதம் குறித்து தினந்தோறும் இழிவாக பேசி வருகின்றனர். அவர்கள் ஹிந்து மதத்தை கைவிட்டுவிட்டனரா? ஒருவேளை அவர்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் எப்படி ஹிந்து மதத்தை இழிவாக பேச முடியும்? ஹிந்து மதத்தை வெறுப்பவர்கள் வேறு மதங்களுக்கு மாறிக்கொள்வது அவர்கள் விருப்பம். ஆனால் அவர்கள் ஹிந்து மதத்தை இழிவாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படவில்லை எனில், ஹிந்து மதத்தின் கண்ணியம் சிதைக்கப்பட்டுவிடும்.