ஹிந்து பெண்கள் நினைத்தால்

பேப் இந்தியா என்ற ஆடை விற்பனை நிறுவனம், சமீபத்தில் ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளியை, சீர்குலைக்கும் நோக்கில், அதனை உருதுவில் ‘ஜஷ்ன் இ ரிவாஸ்’ என பெயர் மாற்றி விளம்பரம் வெளியிட்டது. இதற்கு ஹிந்துக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பவே அவ்விளம்பரத்தை திரும்பப் பெற்று ‘ஜில் மில் சே தீபாவளி’ என பெயர் மாற்றியது. இந்நிலையில், அந்நிறுவன விளம்பரங்களில் பெண்களை நெற்றித் திலகம் இல்லாமல் காட்டுவதை எதிர்த்து எழுத்தாளர் ஷெஃபாலி வைத்யா, டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், ‘நீங்கள் ஹிந்துக்களின் பணத்தை பெற விரும்பினால், ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நெற்றியில் பொட்டு இல்லாமல் வரும் எந்த விளம்பர பொருட்களையும் நான் வாங்க மாட்டேன்’ என கூறி ‘நோ பிந்தி நோ பிஸினஸ்’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினார். மராட்டி திரைப்பட நடிகை சோனாலி குல்கர்னி பொட்டு இல்லாமல் நடித்ததற்காக பி.என்.ஜி நகைக்கடை விளம்பரத்தையும் சாடினார். இதற்கு பெண்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. பலரும் தாங்கள் பொட்டு வைத்த புகைப்படங்களை வெளியிட்டனர். பாரதத்தின் பெருமையாகக் காட்டத் தவறிய பிராண்டுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்பினர். பல வட மாநிலங்களில் ஃபேப் இந்தியா நிறுவன ஷோரூம்களில் எதிர்பார்த்த தீபவளி வசூல் இல்லை, பல ஷோரூம்களில் ஒருவர்கூட வரவில்லை என செய்திகள் வெளியாகி வருகின்றன.