ஹிந்து பெண்களுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா ?…..

கேரளாவில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்ல, அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, செப்., 28ல் தீர்ப்பு அளித்தது. அதில், ‘அனைத்து வயது பெண்களும், எந்தப் பாகுபாடுமின்றி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம்’ என, கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு, நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயன்றது. ஆனால், பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், இந்தாண்டு, பிப்., 6ல் ஒத்தி வைத்தது.

சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள், நாளை மறுநாள் துவங்க உள்ளன. இந்நிலையில், சீராய்வு மனு மீதான தீர்ப்பு, நேற்று வழங்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: மதம் மற்றும் நம்பிக்கைகள் குறித்து, விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என, மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்ற மத வழிபாடுகள் குறித்தும், மனுதாரர்கள் விளக்கி உள்ளனர். தனிநபர் உரிமை மற்றும் வழிபாட்டு உரிமைகளுக்கு இடையே, இந்த வழக்கு உள்ளது. இந்த நீதிமன்றம், கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பை, ஹிந்து பெண்களுக்கு மட்டுமானது என வரையறுத்துவிட முடியாது. பெண்கள் செல்ல தடை விதிக்கும் நடைமுறை, சபரிமலையில் மட்டுமல்ல, மசூதி உட்பட, பல்வேறு மத கோவில்களிலும், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சபரிமலை விவகாரம் என்று மட்டுமல்லாமல், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பெண்களுக்கான அனுமதி மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து, இந்த நீதிமன்றம் பொதுவான கொள்கையை வகுக்க வேண்டும். எனவே, இந்த சீராய்வு மனுக்கள், ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுகின்றன. அதுவரை, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என்ற முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை. இந்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை, அனைத்து சீராய்வு மனுக்களும் நிலுவையில் இருக்கும். இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.