ஹிந்துவின் பார்வையில் ராமனாக, அர்ஜுனனாக புத்தர்!

முன்னுதாரணம் இருந்தால் தான் நல்லது பரவும்; நீ முன்னுதாரணமாகிடு என்று நமக்கு கட்டளையிடுகிறார் பகவான் புத்தர்.  நீயே தீபம் ஆகிடு (ஆத்ம தீபோ  பவ) என்று பொருள் பொதிந்த விதத்தில்  உபதேசிக்கிறார் கௌதம புத்தர்.

புத்தரை பகவான் / கடவுள் என்கிறோம். ஆனால் புத்தரோ ஆன்மா கிடையாது, பூஜை முதலியவை தவறு என்கிறார். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றால் சிவவாக்கியர் வரிகளை நாம் கவனிக்க வேண்டும்.   சிவ வாக்கியர் என்ற மகான் சித்தரான சிவஞானி; ” நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே…”  என்று தொடங்குகிறது  சடங்குகளை தாண்டிய நிலையில் அவருடைய ஆன்ம நாட்டத்தை வலியுறுத்தும் செய்யுள்.  சிவவாக்கியர் வரிசையில் புத்தரை வைத்து பாரதம் போற்றுகிறது என்றால் அதில் ஆச்சரியம் இல்லை.

ஆசையே  துன்பத்திற்கு காரணம் என்பதுதான் அனைவரும் அறிந்த புத்தரின் உபதேசம். துன்பம், துன்பத்தின் காரணம், துன்பத்தைத் தடுத்தல், அதற்கான வழிமுறை என்று (அஸ்வ கோஷர் இயற்றிய) புத்த சரிதத்தில் நான்கு நிலைகளின் பட்டியல் உள்ளது. பதஞ்சலி முனிவரின் யோகசூத்ரத்திலும் இது போன்ற சதுர்-வ்யூஹ (நான்கடுக்கு)  முறை உள்ளது. அது சிகிச்சை முறையை (ஹிந்து தர்மத்தின் உபவேதமான ஆயுர்வேதத்தை) அடிப்படையாகக் கொண்டது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது இன்று உலகம் முழுதும் பரவியுள்ள புத்தர் போதனை ஹிந்து  தத்துவம் எனும் பேரொளியின் மகத்தான கிரணம் எனலாம்.

கோர ரூபம் கொண்ட பல ராட்சஸர்களைக் கொண்டு சித்தார்த்தரை பயப்படுத்த முயல்கிறான் மன்மதன். அங்குள்ள ராட்சஸர்கள் பற்றிய வர்ணனை, சீதையை பயப்படுத்த ராவணன் ஏவிய ராட்சஸிகள் பற்றி வால்மீகி தரும் வர்ணனை போலவே இருக்கிறது. ஹிந்துக்கள் போற்றும் ராமாயணத்தின் சாயல் புத்த சரிதத்தில் படர்ந்துள்ளதற்கு ஒரு எடுத்துக்காட்டு இது.

கடந்த பல கல்ப-காலங்களில் (முற்பிறவிகளில்) சம்பாதித்த புண்ணியத்தால் திண்ணிய மனம் கொண்ட சித்தார்த்தரை மன்மதனால் அசைக்க முடியவில்லை என்கிறது புத்த சரிதம். கல்ப காலம். முற்பிறவி, கர்ம சித்தாந்தம் ஆகியவை வேத ஹிந்து தர்ம கோட்பாடுகள்.

சத்தியத்தை தேடி அலைகையில்  இளம் சித்தார்த்தர் ராஜக்ருஹத்தின்  (ராஜ்கீர்) அருகில் உள்ள பாண்டவ மலை ஏறுகிறார். இதை  “பாண்டவனுக்கு ஒப்பான வீரம் கொண்ட சித்தார்த்தர் பாண்டவ மலை ஏறினார்” என்கிறது புத்த சரிதம். சித்தார்த்தரை (கீதையில் பாண்டவன் என்று குறிப்பிடப்படும் மஹாவீரனான) அர்ஜுனனுக்கு  ஒப்பாக வர்ணித்து பெருமைப்படுகிறது புத்த சரிதம்.

வசிஷ்டர் ராமனைக் காண வந்ததுபோல மன்னர் சுத்தோதனரின் புரோஹிதர் சித்தார்த்தரைக் காணவந்தார் என்கிறது புத்த சரிதம். அரசர்களான பலர் ஞானத்தை அடைந்துள்ளனர், ஆகவே நாட்டிற்குத் திரும்பி அரசனாக இருந்து கொண்டும் ஞான வேட்கையைத் தொடரலாம் என்று புரோஹிதர் கூறும் போதும் ராமன், ஜனகர் போன்ற ராமாயண கதாபாத்திரங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன.

“தனது மகனைப் (ராமனை) பிரிந்த தசரதர் புண்ணியசாலி; ஏனெனில் அவர் அதற்குப் பின் அதிக காலம் உயிர்வாழவில்லை” என்கிறார் சுத்தோதனர் (புத்த சரிதம்). புத்த சரிதத்தில் மீண்டும் மீண்டும் ராமாயண உதாரணம்: “ராமனைப் பிரிந்த தசரதர் போல மகனை (சித்தார்த்தரை) பிரிந்த வருத்தத்தால் பலவிதமாக புலம்பிவிட்டு நினைவிழந்தார் சுத்தோதனர்”.

சித்தார்த்தரின் ஞான வேட்கையைக் கண்ட ஒரு தபஸ்வி  “…ஆசார்யகம் ப்ராப்ஸ்யஸி” (தாங்கள்  ஒரு சிறந்த ஆச்சார்யராக மிளிர்வீர்கள்) என்று கூறுகிறார் – புத்த சரிதம். ஆம்.  இது தான் ஹிந்து தர்மம். அறிவுபூர்வமான மாற்றுக் கருத்து கூறுபவர் எதிரி எனும் கருத்து இங்கில்லை. அப்படி மாற்றுக் கருத்துகள் மூலம் புதிய ஆசான் கிடைப்பார், உலகிற்கு புதிய வழிகிடைக்கும் எனும் விசாலமான மனம் தான் வைதிகமான ஹிந்து மனம், வைதிகமான ஹிந்து மதம்.

ஹிந்து சமுதாயத்தில் தானும் தன்னுடைய சமூகத்தாரும் தீண்டாமை  கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்டதால் மதம் மாற விரும்பிய  டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கிறிஸ்தவத்தையோ இஸ்லாத்தையோ அல்லாமல் பௌத்தத்தை தேர்வு செய்தது எவ்வளவு பொருள்  பொதிந்த விஷயம்!.

தரவுகள் நன்றி: முனைவர் ம. ஜெயராமன்

சித்தார்த்தர் புத்தர் ஆன கதை

கௌதம புத்தர் இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்தில் பௌர்ணமி தினத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். இவர் “சாக்கிய முனி” என்றும் அழைக்கப்பட்டார் மாயா இவரது தாயார். சுத்தோதனர் இவரது தந்தை.சித்தார்த்தர் யசோதரையை மணந்தார். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சித்தார்த்தர் துறவியாவார் என்று ஞானிகள் கருதியதால் அவரது தந்தை வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட வைத்தார்.

சித்தார்த்தர் ஒருமுறை வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு வயதான தள்ளாடும் கிழவர், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன் இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் ரகசியத்தைக் காண கானகம் நோக்கி நடந்தார். பல நாட்கள் பட்டினி கிடந்து தவத்தில் அமர்ந்தார். போதி மரத்தடியில் இவருக்கு ஞானம் கைவர பெற்றது.

கனிஷ்கர் ஆண்ட காலத்தவரான அஸ்வகோஷர் சமஸ்கிருதத்தில் இயற்றிய காவியம் புத்தசரிதம். சீன மொழி யிலும் பிறகு திபெத்திய மொழியிலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டது.

எதிலும் தீவிரம் கூடாது : புத்தர்

பல நாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் ஒருவன் புத்தர் தவம் புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றி கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்”. சித்தார்த்தருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. தனது கடந்த காலத்தில் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், இதே நிலை நீடிக்குமானால் தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே வாழ்வில் எதையும் மிதமாக செய்து வரவேண்டும் என்று உணர்ந்தார்.

மகாயானம், ஹீனயானம் என்றால்…

புத்தரை கடவுளின் அவதாரமாகக் கொண்டாடுவோர் மகாயான பிரிவினர் புத்தரை நிர்வாண நிலைபேறு அடைந்த சாதாரண மனிதராக கருதுவோர் ஹீனயான பிரிவினர்.

கருத்து

பிரதமர் நரேந்திர மோடி

புத்தரின் வழியே உத்தம மார்க்கம்

புத்தரை உலகத்திற்கு அளித்தது பாரதம் தான் என்று சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நா சபையில் நான் கூறியதை  நினைவுகூர்கிறேன். நம் நாடு சுதந்திரம் அடைந்து 75-வது விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்தில்,பல்வேறு துறைகளில் உலக அளவில் பாரதம் பெற்றிருக்கும் சாதனைகளுக்கு புத்தரின் உணர்வுகளும் உத்வேகமும் தான் காரணம்.

இந்த நூற்றாண்டின் மிகவும் சவால் நிறைந்த நேரம் இது. போர், பொருளாதார நிலையற்ற தன்மை, மதவெறி, பருவநிலை மாற்றத்தின் விளைவாக உயிரினங்கள் மறைவது, பனிப்பாறைகள் உருகுவது போன்றவைகள் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மத்தியில் புத்தரை நம்பும் மனிதர்கள், அனைத்து உயிரினங்களின் நலன்களுக்காக செயல்படுகிறார்கள். இந்த நம்பிக்கைதான் பூமியின் மிகப்பெரிய வலிமை. இன்று உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் புத்தர் தீர்வு கொண்டிருந்தார். போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு வெற்றி தோல்விகளை துறப்பதன் மூலம் உலக அமைதி ஏற்படும்.

புத்தரின் கோட்பாடுகளை முழுமனதோடும், அர்ப்பணிப்போடும், பரப்புவதற்கு பாரதம் உறுதிபூண்டுள்ளது. புத்தமத மையங்களுக்கிடையிலான தொடர்பை மேம்படுத்துதல், சாரநாத்தையும்  குஷிநகரையும் புனரமைத்தல், குஷிநகர் சர்வதேச விமானநிலையம், லும்பினியில் உள்ள சர்வதேச புத்தக் கூட்டமைப்போடு இணைந்து சர்வதேச புத்த கலாச்சார மையம் ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்த மதத்தோடு எனக்கான தனிப்பட்ட முறையிலான இணைப்பு நான் பிறந்த வாட்நகர். அங்கு முக்கிய புத்தமத மையத்திற்கு யுவான் சுவாங் வருகை தந்தார். பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பாதையே புத்தரின் பாதை. புத்தரின் வாழ்க்கைப் பயணத்தின் போது அடுத்தவர்களின் வாழ்வில் உள்ள வலிகளை அவர் நன்குணர்ந்தார். புத்தர், தனது அரண்மனையையும் ராஜ்ஜியத்தையும் விட்டு வெளியே வந்தார். சுயநலம், குறுகிய எண்ணம் போன்றவைகளை தவிர்த்து, உலகளாவிய நன்மைக்கான எண்ணம் என்ற புத்தரின் மந்திரத்தை ஏற்பதே வளமான உலகை உருவாக்கும் மார்க்கம்.

(டெல்லியில் உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையிலிருந்து)