ஹிந்துத்துவ புத்தெழுச்சிக்கு பாடுபட்ட பாலாசாஹேப் தேவரஸ் ஜெயந்தி

மூன்றாவது ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் (சர்சங்கச்சாலக்) பாலாசாஹேப் தேவரஸின் ஜெயந்தி டிசம்பர் 11ம் தேதி கொண்டாடப்பட்டது. இத்தருணத்தில் அவரைப் பற்றிய பசுமையான நினைவுகள் நெஞ்சில் ஆர்ப்பரிக்கின்றன. அதை இக்கட்டுரை வாயிலாக பகிர்ந்து கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் முதலாவது அகில பாரத தலைவர் டாக்டர் ஹெட்கேவார், இரண்டாவது சர்சங்கச்சாலக் குருஜி கோல்வல்கர், மூன்றாவது சர்சங்கச்சாலக் பாலாசாஹேப் தேவரஸ்,
`ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவாரை பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்காதவர்கள் பாலாசாஹேப் தேவரஸை பார்க்கலாம். அவரிடம் ஹெட்கேவார் இயல்புகள் காணப்படுகின்றன. எனக்கு இரண்டாவது சர்சங்கச்சாலக் ஆகும் வாய்ப்பு கிடைத்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு’ என்று குருஜி கோல்வல்கர் பலமுறை கூறியிருக்கிறார். இதை பாரதிய மஸ்தூர் சங்க நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான தத்தோபந்த் தெங்கடிஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலாசாஹேப் தேவரஸ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவரின் முழுப்பெயர் மதுகர் தத்தாத்ரேய தேவரஸ் என்பதாகும். அவர் 1915ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி மராத்தி, தேஷஸ்த ரிக்வேதி பிராமண குடும்பத்தில் பிறந்தார். (மகாகவி பாரதியாரின் பிறந்த நாளும் டிசம்பர் 11 தான் என்பது குறிப்பிடத்தக்கது) பாலாசாஹேப் தேவரஸின் சங்கத் தொடர்பு தொன்மையானது, ஆழமானது, வலுவானது. டாக்டர் ஹெட்கேவார் 1926ல் நாக்பூரில் முதலாவது ஷாகாவைத் தொடங்கினார். இதிலேயே சிறுவனாக இருந்தபோது பாலாசாஹேப் தேவரஸ் பங்கேற்றுள்ளார். அவர் 1973ம் ஆண்டுதான் மூன்றாம் சர்சங்கச்சாலக்கானார் என்ற போதிலும் 11ஆம் வயதிலிருந்தே இதில் அவர் ஊறித் திளைத்துள்ளார்.

விடுதலை போராட்டத்தில்

பாலாசாஹேப் தேவரஸ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தப்பட்டது. 1940களில் நடைபெற்ற இப்போராட்டம் நாட்டின் கவனத்தை ஈர்த்தது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பாலாசாஹேப் தேவரஸுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1942ல் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பாலாசாஹேப் தேவரஸ் வீரியமுடன் சங்கப் பணியில் ஈடுபட்டார். 1951ல் மகாராஷ்டிராவின் விதர்ப்பா பிராந்த பிரச்சாரக்காக (மாநில அமைப்பாளராக) அவர் நியமிக்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் மத்தியப் பிரதேச பிராந்த பிரச்சாரக்காக நியமிக்கப்பட்டார்.

1964ல் அகில பாரத இணைப் பொதுச் செயலாளராக (சஹ சர்க்காரியவாஹாக) நியமிக்கப்பட்டார். அப்போது சர்சங்கச்சாலக்காக இருந்த குருஜி கோல்வல்கருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். குருஜி கோல்வல்கர் மறைந்ததையடுத்து 1973ல் பாலாசாஹேப் தேவரஸ் மூன்றாவது சர்சங்கச்சாலக்கானார். அவர் 1994ல் மறையும் வரை இப்பதவியை வகித்ததுடன் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

தீண்டாமையை ஒழிக்க முன்னுரிமை

முதல் இரண்டு சர்சங்கச்சாலக்குகளும் கலாச்சாரத்துக்கும், ஆன்மிகத்துக்குமே முக்கியத்தும் அளித்தனர். தேச சூழ்நிலை மாறிவருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்ட பாலாசாஹேப் தேவரஸ்ஜி சங்கப் பணியை சமூகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்தார். பாலாசாஹேப் தேவரஸின் மிக முக்கியமான பணி, ஹிந்து சமுதாயத்தில் ஜாதி வேறுபாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். இதை ஒரு புரட்சிகர இயக்கமாகவே அவர் நடத்தினார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

1974ல் அவர் ஆற்றிய உரையில் தீண்டாமைதான் மிகப்பெரிய குற்றம். இது உண்மையான ஹிந்து சமுதாய ஒற்றுமைக்கு தடைக்கல்லாக இருக்கிறது. எனவே இதை தகர்க்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார். பாலாசாஹேப் தேவரஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்ததற்கு அவர் உள்ளத்தில் சாவர்க்கர் விதைத்த கருத்துக்கு முக்கியப் பங்குண்டு.

பாலாசாஹேப் தேவரஸ் வெறும் பேச்சுடன் நின்று விடவில்லை. தீண்டாமைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். வீட்டிலும் இதை அமலாக்கினார். அவரது தாயார் பழமையில் ஊறியவர். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனது சகாக்கள் தன் வீட்டில் சாப்பிட்ட போது அவர்களது உணவுக் கலன்களை தனது தாயார் தூய்மை செய்ய பாலாசாஹேப் தேவரஸ் வழி வகை செய்தார்.

எல்லா சமூகத்தினருக்கும் தரமான கல்வியும், சுகாதார வசதியும் கிடைக்க வேண்டும். குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்கு இது சென்று சேர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனடிப்படையில்தான் 1979ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி சேவா பாரதி தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான இதன் வாயிலாக ஏராளமான பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் ஏற்படும் போதெல்லாம் சேவா பாரதி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் போர்க்கால அவசரத்துடன் பணியாற்றி வருகிறது.

சமூகங்களை ஒன்றிணைத்தவர்

ஹிந்துக்கள் அனைவரும் ஒரே விருட்சம்தான். மரத்தில் பல கிளைகள் இருக்கலாம். இந்த கிளைகளுக்குச் சமமானவை ஜாதிகள். ஆனால் ஹிந்து சமுதாயம் என்பதுதான் மரம் என்பதை மறந்து விடக்கூடாது என்று பாலாசாஹேப் தேவரஸ் பல முறை குறிப்பிட்டுள்ளார். ஹிந்துக்களை மூளைச்சலவை செய்து முஸ்லிம்களாக மாற்றுவதற்காக பெட்ரோல் பணம் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அவர் திடமாக இருந்தார்.

தமிழ்நாட்டில் மீனாட்சிபுரத்தில் கட்டாய மதமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இப்பின்னணியில் விளிம்பு நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று விளக்கி வைக்கப்பட்டுள்ள மக்களைத் தழுவிக் கொள்ள வேண்டும். அனைவரும் ஒருதாய் மக்களே என்பதை செயல் அளவில் காட்ட வேண்டும் என்பதை பாலாசாஹேப் தேவரஸ் நிலைநாட்டியுள்ளார்.

நெருக்கடி நிலையின்போது

1975ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார். அது ஜனநாயகத்தின் இருண்ட காலமாகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. பாலாசாஹேப் தேவரஸ் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு உரியது.

பாலாசாஹேப் தேவரஸ் எதிர்மறை சிந்தனைக்கு இடம் கொடுக்கக்கூடாது. எப்போதும் ஆக்கப்பூர்வமாகவே சிந்திக்க வேண்டும். சுய மேம்பாட்டில் அக்கறை காட்ட வேண்டும். ஒழுக்கமும், கட்டுப்பாடும் உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும். இதில் திடமாக இருந்தால் எவராலும் எழுச்சியை தடுத்து நிறுத்தி விட முடியாது என்பதை பாலாசாஹேப் தேவரஸ் தனது உரையில் அழுத்தமாக குறிப்பிடுவது வழக்கம். அவர் சர்சங்கச்சாலக்காக இருந்தபோது ஏ.பி.வி.பி, பாரதிய மஸ்தூர் சங்கம் ஆகியவற்றின் பணிகள் விரிவாக்கப்பட்டன.

ராம ஜன்ம பூமி இயக்கம் ஏற்படுத்திய எழுச்சியை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ராம ஜன்ம பூமி இயக்கம் விதைக்கப்பட்டதற்கும் அது முளைத்து வளர்ந்து, நிமிர்ந்தோங்குவதற்கும் பங்களிப்பு நல்கிய பலரின் பாலாசாஹேப் தேவரஸும் ஒருவர் ஆவார். ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அயோத்தி இயக்கத்தை முன் நின்று நடத்தியது. கோடிக்கணக்கான ஹிந்துக்களை ஒரு குடையின் கூழ் திரட்ட இது வழிவகுத்தது.

பா.ஜ.கவும் தேவரஸ்ஜியும்

அரசியலிலும் உரிய கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதில் பாலாசாஹேப் தேவரஸ் நாட்டம் கொண்டிருந்தார். சங்கம் (ஆர்.எஸ்.எஸ்)  நேரடியாக அரசியல் நடவடிக்கைளில் ஈடுபாடாது. எனவே சங்கத்தின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கக்கூடிய கட்சி அரசியல் களத்தில் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் அவரது கவனம் குவிந்தது. அவர் சர்சங்கச்சாலக்காக இருந்தபோதுதான் 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பாரதிய ஜனதா கட்சி உருவானது. இது பாரதிய ஜனசங்கத்தின் மறு உருவம்தான் என்ற போதிலும் இதை வடிவமைத்ததற்கு ஆலோசனை ரீதியான உள்ளீடுகளை அளித்ததில் பாலாசாஹேப் தேவரஸுக்கு பெரும்பங்கு உண்டு.

உலகம் முழுக்க
சங்கத்தை பரப்பியவர்

அவர் 1996ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி மறைந்தார். ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை ஷாகாக்களை பாரதத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தியவர் என்ற சிறப்பு அவருக்கு உண்டு. இதனால்தான் அவரது ஜெயந்தியை உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் பூரிப்புடன் கொண்டாடுகின்றனர்.

கட்டுரையாளர்: ஆய்வாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி