ஹிந்துக்கள் நெடுநாள் ஜீவிக்க வேண்டுமென்று நிச்சயித்திருக்கிறார்களோ அல்லது மடிந்து போய்விட வேண்டுமென்று நிச்சயித்திருக்கிறார்களோ தெரியவில்லை. காலத்தின் சின்னங்களையும் குறிப்புகளையும் கவனிக்குமிடத்து நமது ஜாதி (தேசியம்) இன்னும் சீர்கேடுகள் நீங்கி உலகத்திலுள்ள மற்ற ஜாதியாரெல்லாம் கண்டு ஆச்சரியப்படும்படி வாழலாம் என்று தோன்றுகிறது. ஆனால் நம்மவர்களிலே சிலரின் சிரத்தையற்ற மாதிரியையும் உறக்கத் தன்மையையும் கவனிக்கும்போது, ஏது! ஹிந்து ஜாதியே அழிந்து போய் கனவாய், பழங்கதையாய் போய்விடுமோ” என்று அச்சம் உண்டாகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் தெரு வழியாக நாம் நடந்து வந்த காலத்தில் எதிரே 10 அல்லது 11 வயதுள்ள இரண்டு அழகிய கன்னிகைகள் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏதோ இயேசுநாதன் கடவுள்” என்று பேசிக்கொண்டு வந்தார்கள். இந்தச் சிறிய குழந்தைகள் கடவுளைப் பற்றி என்ன பேசுகின்றனர் என்பதை அறிய ஆவலுற்று அதைச் சிறிது நின்று கவனித்தோம். சில சில வார்த்தைகள் காதில் விழுந்ததற்
கப்பால் மேற்படி கன்னிகைகள் நடந்து அப்பால் போய்விட்டார்கள். ஐயோ! வருஷங்களாக ‘பெண் கல்வி வேண்டும்’, ‘பெண் கல்வி வேண்டும்’ என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் பைபிள் வாசித்துக் கொண்டு வரும் பொருட்டாகத்தானா? வருங்காலத்தில் இந்தப் பெண்கள் தாய்மாராகி ஜாதிக்கு (தேசத்திற்கு) காப்புத் தெய்வங்களாக எப்படி இருக்கப் போகிறார்கள்?
நமது கிறிஸ்தவ நண்பர்கள் நாம் சொல்வதிலிருந்து மனஸ்தாபமடைய வேண்டியதில்லை. அவர்களுடைய தெருவுக்கு நடுவிலே நாம் போய் ஒரு பள்ளிக்கூடம் வைத்து சில ஹிந்து சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தால் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு தமது குமாரத்திகளை அனுப்புவார்களா? அதுபோலவே ஹிந்துக்களும் தமது சகோதரிகளைக் காப்பாற்றிக் கொள்வது இவர்களுடைய கடமையல்லவா? இதில் கிறிஸ்தவர்களை பழி கூறுகிறவன் மூடன். குற்றமெல்லாம் நம்மவர்களின் பேரிலேயே இருக்கிறது. கிறிஸ்தவ குருமார்கள் மத அபிவிருத்திக்கு முக்கியத் துணையாக குழந்தைப் பள்ளிக்கூடங்கள் வைத்து நடத்துகிறார்கள். நமது குருமார்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் நிலைமையை நினைக்கும்போது வெட்கமாயிருக்கிறது. குருமார் இப்படியிருந்தால் சாதாரண ஜனங்கள் அவர்களுடைய காரியங்களை தமது பொறுப்பாக்கிக் கொள்வது கடமையாகிறது. இந்த விஷயத்தில் நம்மவர்கள் சர்வ ஜாக்கிரதையுடன் வேலை செய்யவேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெண் பாடசாலை ஏற்படுவது நமது தேசாபிவிருத்திக்கு முதல்படி என்று சொல்லலாம்.
‘இந்தியா’ பத்திரிகையிலிருந்து (29.9.1906)