தெற்கு ரயில்வே, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம், கேரளா மற் றும் ஆந்திரா, கர்நாடகாவில் ஒரு சில பகுதிகள் என 5,087 கி.மீ., துாரத்திற்கு ரயில்களை இயக்கி வருகிறது. 300 விரைவு ரயில்கள் உட்பட, 1000த்துக்கும் மேற்பட்ட ரயில் சர்வீஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. 21.50 லட்சம் பேர் தினமும் பயணம் செய்கின்றனர்.
ரயில் இயக்கம், தொழில்நுட்பம், வணிக பிரிவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 90,000த்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில், 50 சதவீதம் பேர், பயணியரிடம் நேரடியாக தொடர்பு உள்ளவர்கள். இவர்கள் டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் ஹிந்தி மொழி பேசும் பணியாளர் எண்ணிக்கை, 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இவர்களுக்கு தமிழ் உள்ளிட்ட மற்ற பிராந்திய மொழிகளில் பேசினால் பேசவும், புரிந்துகொள்ளவும் முடியாது. தெற்கு ரயில்வேயில் ரயில் பயணியருக்கு தடையின்றி தகவல் அளிக்க, அந்தந்த கோட்டத்தில் பயன்பாட்டில் உள்ள உள்ளூர் மொழியை கற்றுக் கொள்ள தெற்கு ரயில்வே குறுகிய கால பயிற்சி அளித்து வருகிறது.
அதன்படி, ஹிந்தி மட்டுமே தெரிந்த பணியாளர்களுக்கு உள்ளூர் கோட்டங்களுக்கு ஏற்ப, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியை பேச உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ‘பாஷா சங்கம்’ செயலி வாயிலாக, பயிற்சி எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.