ஸ்ரீ ராமனை விட உயர்ந்தது எது? பரதன் பதில்கள்

ஸ்ரீ ராமனை விட உயர்ந்தது எது?

– பி. சகுந்தலா, கரூர்

ஸ்ரீ ராமநாமம் தான் உயர்ந்தது. ஸ்ரீராமனுக்கு கங்கையைக் கடக்க ஒரு படகு தேவைப்பட்டது. ஆனால் ஹனுமான் சமுத்திரத்தையே கடக்க ஒரு ராமநாமத்தால் முடிந்ததே…!

hanuman

தவறுகளுக்கு மருந்து தண்டனையா? மன்னிப்பா?

– பி. தங்கசாமி, மதுரை

ஒரு தடவை செய்தால் அது தவறு… அது மன்னிக்கப்பட வேண்டியது. அதே தவற்றை தொடர்ந்து செய்தால் அது குற்றம்… அது தண்டிக்கப்பட வேண்டியதுதான்.

 

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன?

– சி. சண்முகம், பரமக்குடி

ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக. – விசுவாமித்ர மகரிஷி.

 

காதலுக்கு கண் இல்லை என்கிறார்களே?

– வி. பரசுராமன், ஊரப்பாக்கம்

கண்பார்வை இல்லாதவன் கூட ஒரு கோலைத் தரையில் தட்டித் தட்டி பாதையில் எது மேடு, பள்ளம் என்று தெரிந்து சரியான பாதையில் செல்கிறான். சில ஜென்மங்களுக்கு இந்த விவஸ்தைகூட இல்லையே…

 

‘பரிதாபத்துக்குரிய நிலை’ என்றால் என்ன?

– பி. நரசிம்மன், தஞ்சாவூர்

தவறான வழிகளில் ஏராளமான கல்லூரிகள், தொலைக்காட்சிகள் என கோடிக்கணக்கில் பணம் இருந்தும் நிம்மதியில்லாமல் நீதிமன்ற வாசல்படி ஏறி அலைந்து கொண்டிருக்கிறார்களே… இவர்களின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. என்ன சொத்து இருந்து என்னத்துக்கு? நிம்மதி போச்சே!

 

ராம்குமார்  தற்கொலையால்  சுவாதி கொலை  புதைந்து  போகுமா??

– வி. தங்கராஜ், திருநெல்வேலி

அதற்காகத்தானே  இந்த நாடகமெல்லாம்.  ராம்குமார் அம்புதான்.  எய்தவர் யார்?

 

பரதனாரே… வாடகைத் தாய் பற்றிய தங்களின் கருத்தென்ன?

– எஸ். மாதங்கி, சிதம்பரம்

வாடகைத் தாய் என்பதெல்லாம் நமது பண்பாடு இல்லை. பெண்கள் ஒன்றும் குழந்தை பெறும் மெஷின் இல்லை. குழந்தை இல்லாத தம்பதிகள் ஆதரவற்ற குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்வதுதானே…?

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.