தமிழகத்தில் உள்ள ‘ஸ்டெர்லைட்’ ஆலையை மூடுவது தொடர்பான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ‘வேதாந்தா’ குழுமத்தின் மனுவை பரிசீலிக்க, உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
இவ்வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும் என வேதாந்தா தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்றுக்கொண்டது.
இவ்வழக்கில் வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், வருகிற ஜனவரி 22ம் தேதி பட்டியலிடப்பட்டுள்ள இம்மனுவை விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதி அமர்விடம் வலியுறுத்தினார்.
முன்னதாக, வேதாந்தா குழுமத்தின் மனுவை விசாரிக்க, இரு பிரத்யேக தேதிகளை ஒதுக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசுபட்டை எதிர்த்து போராடிய மக்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், மற்றும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, 2018 மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து நிரந்தரமாக மூடுமாறு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.