துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, அருகே வசிக்கும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தலைநகர் புதுடில்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் துாத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி, மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதி விசாரணையை, டிசம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கிராம மக்கள், புதுடில்லி ஜந்தர் மந்தரில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி அறவழியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற துாத்துக்குடி வணிகர் பேரமைப்பு நிர்வாகி பி.கே.ஜெயபாலன் கூறியதாவது: ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால், எங்கள் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்க ஏதுவாக, ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது