திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததுபோல, தற்போது சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க அனுமதிக்காது. இத்திட்டம் தொடர்பாக கடந்த 2018 மார்ச்சில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்று தெரிவித்திருந்தது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் பெரிய அளவிலான கப்பல்கள் வரும் என்று தி.மு.க சொல்கிறது. ஆனால் 20 ஆயிரம் டன் எடையுள்ள கப்பலே இதில் பயணிக்க முடியாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இத்திட்டத்தால் தி.மு.கவை சேர்ந்த டி.ஆர். பாலு, கனிமொழி ஆகியோரின் கப்பல் நிறுவனங்களே பயன்பெறும், இதனால் தொழில்முனைவோருக்கோ, மீனவர்களுக்கோ எவ்வித பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தால் பயனில்லை என்று, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆர்.கே.பச்சூரி கமிட்டியும் தெரிவித்துள்ளது. எனவே சுற்றுச்சூழல், பொருளாதாரம் என எந்த அடிப்படையிலும் இத்திட்டத்தால் பயனில்லை. இருவர் நடத்தும் கப்பல் நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். ராமர் சேதுபாலம் இருக்கிறதா என்பதை கண்டறியவும், அந்த பாலம் இருந்தால் அதை பாரம்பரியசின்னமாக அறிவிக்கவும் உரிய ஆய்வுகளை நடத்த, கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு கமிட்டியை பிரதமர் அமைத்தார். 3 ஆண்டுகளில் அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆனால், இத்திட்டம் தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்த பதிலை, சட்டப்பேரவைத் தீர்மானத்தில் ஸ்டாலின் திரித்து கூறியுள்ளார். அத்துடன், இத்திட்டத்தை அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தில் இந்த இரண்டு பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்றைய தேதியில் முதல்வர் கூறுகின்ற திட்டம் ‘அலைன்மென்ட் 4 ஏ’ என்று தெளிவுபடுத்தினால், பா.ஜ.க அதனை எதிர்க்கிறது. ‘4 ஏ’ இல்லை. மத்திய அரசோடு இணைந்து புதிதாக ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதாக கூறினால், அதனை பா.ஜ.க ஆதரிக்கும். இதனால்தான், பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், ராமர் சேதுவிற்கு பாதிப்பு வராமல் இது இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில், 2018 மார்ச் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், இந்த ‘அலைன்மென்ட் 4 ஏ’ குறித்து தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு நன்மை கிடைக்க ஆளுநருடன் முதல்வர் இணக்கமாக செயல்பட வேண்டும்” என கூறினார்.