ஸ்டாலினின் மௌனம் சம்மதம்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க எம்.பி ஆ.ராசா, கண்ணியமற்ற முறையில், தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசியது குறித்து, மொத்த தமிழகமும் கொந்தளித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வராக இருப்பவர் இந்த வேளையில் தொடர் மவுனம் சாதிப்பது, சந்தர்ப்பவாதமாகவும் பிரித்தாளும் சதியாகவும் பார்க்கப்படுகிறது. ராசா பேசியது குறித்து தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன? தி.மு.கவின் குரலாக வந்திருக்கும் ராசாவின் பேச்சை முதல்வரின் மவுனம் ஆதரிக்கிறதா, மவுனமாக ரசிக்கிறதா? திராவிட மாடலை முன்னெடுக்க, தமிழர் அடையாளத்தை அழிக்க எடுக்கும் முயற்சிதானே ராசாவின் பேச்சு? அவரது நோக்கம் தமிழரை பிளவுபடுத்தி, திராவிடத்தை நிலைநிறுத்தி, மதமாற்றத்திற்கு பாதை அமைத்து தருவதுதான் என்பது மறைக்க முடியாத உண்மை. தமிழக மக்கள் மனதை புண்படுத்தும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காத ஆ. ராசா, தான் பேசியது சரிதான் என்று மீண்டும் பேசியுள்ளார். இதனால் அவரின் பேச்சு முதல்வரின் ஆசியுடன் தான் பேசப்பட்டது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. தொடரும் ஸ்டாலினின் மவுனம் அதை நிரூபிக்கிறது. தமிழ் மக்களுக்காக, அவர்களின் தன்மானத்திற்காக, உரிமைக்காக குரல் கொடுக்கும் பா.ஜ.க தொண்டர்களை கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என்பதை, தி.மு.கவின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறையும், தலைக்கனத்துடன் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.