“ஷரியத் கவுன்சில் நீதிமன்றம் அல்ல” சென்னை உயர் நீதிமன்றம்

பொது சிவில் சட்டம்  (UCC) நிறைவேற்றப்படாமல்  இன்னும் விவாதப் பொருளாகவே இருந்து வரும் விஷயம்.  எல்லோருக்கும்  ஒரே சட்டம் – ராம், ராபர்ட், ரஹீம் யாராக இருந்தாலும் திருமணம், விவாகரத்து,  சொத்துரிமை போன்ற விவகாரங்களில் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே சட்டம் தான். இதைச் சொல்லாமல் சொல்லி சுட்டிக்காட்டியுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்.

நெல்லையைச் சேர்ந்த ரபி அஹமதின் மனைவி குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கில் ரபி அஹமது ரூபாய் ஐந்து லட்சம் நஷ்ட ஈடும் குழந்தை பராமரிப்புச் செலவும் தரவேண்டுமென நெல்லை கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டுமென உயர்நீதி மன்றத்தில் ரபி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமி
நாதன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தது குற்றம். மனைவியைப் பிரிந்ததற்கான சான்றிதழை ஷரியத் கவுன்சில் வழங்கியதாக மனுதாரர் கூறியதை ஏற்கமுடியாது .

ஷரியத் கவுன்சில் ஒரு தனியார் அமைப்பு தான்; நீதிமன்றமல்ல. இவர் நீதிமன்றம் மூலமாக முறைப்படி விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மறுமணம் செய்துகொண்டது தவறு. ஆகவே, கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பு சரியானதே என்று நீதிபதி கூறினார்.

மேலும், இதே விஷயத்தை ஒரு ஹிந்துவோ, கிருஸ்தவரோ, பார்சியோ செய்திருந்தால் பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்டிருக்குமே, அதுபோலவே இஸ்லாமியர் செய்தாலும் அது குற்றம் தான் என வழக்கை முடித்தார்.

சட்டமா? ஷரியத்தா? எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்திய மக்கள் என்பது நிஜமானால் எல்லோருக்கும்  ஒரே நீதி  -அது  சட்டப் புத்தகம் வகுத்த நீதி தான். அது உண்மையாகவே மதச்சார்பற்றது.