மரியா விர்த் என்ற ஜெர்மானிய எழுத்தாளர் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். நான் சில மாதங்களுக்கு முன்னால் டெல்லியில் நடந்த பல்வேறு மதத்தினரிடையே நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் (inter – faith discussions) பங்கு கொண்டேன். அது பெயரளவில்தான் கலந்துரையாடல். உண்மையில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் தான் நடந்தது. கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் தம் மதத்தைப் பற்றி புகழ்ந்தார்கள். இஸ்லாமியர்களும் தம் பெருமை பேசினர். ஆனால் ஹிந்து மதம் சார்பாக கலந்துகொண்டவர்கள் மட்டும் கிறிஸ்தவம், இஸ்லாத்தை தூக்கி வைத்துப் பேசினார்கள். என்னுடைய கணிப்பில் ஹிந்துக்கள் இன்னமும் தங்களுடைய முன்னாள் எஜமானர்களைக் குஷிப்படுத்தியே ஆகவேண்டும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது” என்கிறார் மரியா. மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
* நான் மிகவும் மதிக்கும் ஒரு ஹிந்து மத ஆன்மிக சமூக சேவை இயக்கம் வெளியிட்ட ஒரு சிறு நூலைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அந்த புத்தகம் என்றும் வாழும் வாழ்க்கைக் கோட்பாடுகளைப் பற்றியது. அந்தப் புத்தகத்தில் ‘சத்தியம் வத, தர்மம் சத’ (உண்மையே பேசு, அற வழியில் நட) என்பன போன்ற உயரிய விழுமியங்களை ஹிந்து தர்ம நூல்கள் என்ன சொல்கின்றன என்று எழுதிவிட்டு நிறுத்தாமல், இணையாக கன்பூசியஸ், லாவோசே என்ன சொல்கின்றனர், குரானும் பைபிளும் என்ன சொல்கின்றன என்று பட்டியலிட்டுக் கொண்டு போகிறார்கள். ஒரு ஹிந்து இயக்க வெளியீடு. வாசகர்கள் 95 விழுக்காட்டினர் ஹிந்துக்களே. இந்த வெளியீட்டில் எதற்கு பிற மத நூல்களின் கருத்துக்கள்? என்ன சொல்ல வருகிறார்கள்? அதாவது பிற மதங்களுக்கு ஒத்த கருத்துக்கள் ஹிந்து மதத்தில் இருந்தால், போனால் போகிறது ஏற்றுக் கொள்ளலாம் என்ற புத்தி!
* ஒரு பிரபல (ஹிந்து மத பக்தி நூல் வெளியிடும்) நிறுவனத்தினர் நடத்திய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அது வைணவ ஆச்சாரியார் ராமானுஜரைப் போற்றும் விழா. பாரம்பரிய உடையிலே மலர்ந்த முகத்துடன் ஒரு வைணவ அறிஞர் மைக்கைப் பிடித்தார். ராமானுஜர் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும் அதற்கு சான்றாக ‘துலுக்க நாச்சியார் (உறையூர்), பீவி நாச்சியார் (மேல்கோட்) என்ற பக்தைகளை மேற்கோள் காட்டினார். அந்த இரண்டு முஸ்லிம் பெண்மணிகளை அவர்களின் கிருஷ்ண பக்திக்காக நான் மதிக்கிறேன். ஆனால் ஒன்றை நாம் நினைவுகொள்ள வேண்டும். ராமானுஜர் வாழ்ந்த அதே காலத்தில் தான் பாரத நாடெங்கும் முஸ்லிம்களின் படையெடுப்பும் கொடுங்கோன்மைகளும் வளர்ந்து கொண்டிருந்தன. மேற்சொன்ன இரண்டு பக்தைகளும் சிறப்பான விதிவிலக்குகள். Shining exceptions and exceptions prove the rule! நாம் இந்த காலத்தில் அனுபவிக்கும் ‘தேர்தல் சார்ந்த அரசியல் நிர்பந்தங்களை ராமானுஜரின் மீதும் சுமத்திக்காட்ட வேண்டுமா என்ன?
* என் நண்பர் முகநூலில் திருக்குறளைப் பற்றி பதிவிட்டிருந்தார். அவர் கருத்து : திருக்குறளை ஏன் தேசிய புத்தகமாக அறிவிக்கக்கூடாது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பாளர்கள் வாயை அடைக்கலாமே? இறுதியாக, எல்லாவற்றிற்கும் மேலாக திருக்குறள் சமய சார்பற்ற நூல்”. என் நண்பர் நன்கு படித்து பல பெரிய நிறுவனங்களில் பல உயரிய மேலாண்மை பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இருந்தபோதிலும் அவராலும் ‘மதசார்பின்மை’ ஊறுகாய் தொட்டுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை!
திருவள்ளுவர் பல குறள்களில், கடவுள் வாழ்த்து தொடங்கி, விஷ்ணு மலரடி, திருமகள் தமக்கை, இந்திரன், ததீசி முனிவர், நீத்தார் பெருமை, ஊழ்வலி ஆகியவற்றை அருமையாக விளக்கியிருக்கிறார். அவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு திருவள்ளுவருக்கு செக்யுலர் சான்றிதழ் பெற்றுத்தர நாம் ஏன் சிரமப்பட வேண்டும்? எப்படியாவது வளைந்து கொடுத்து, குட்டிக்கரணம் போட்டு, குளிப்பாட்டி, குல்லா அணிந்து மாற்று மதத்தினரிடம் நற்சான்று பெற்றுவிட வேண்டுமா? இறைவா, ஏன் இந்த மயக்கம் எங்களில் சிலருக்கு?
Minority complex