இந்த வார மிளிரும் புத்தொளி தொடரில் நாம் சந்திக்கும் முனைவர் ராமசுப்ரமணியம் ஐ டி தொழில் நுட்ப மேலாண்மை ஆலோசகர், சைபர் குற்ற தடுப்பு- கண்காணிப்பு- புலனாய்வு தளங்களில் பல நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் உதவுபவர், பேராபத்துக்களினால் தொழில்கள் முடங்காமல் தொடர்ந்து நிறுவனத்தை எப்படி நடத்துவது, அதற்கான கட்டமைப்பை உருவாக்கும் மேலாண்மை பயிற்சி அளிப்பவர் என்று பல் துறை விற்பன்னர். மாநாடுகள் – பயிற்சி வகுப்புகள்- தொழில் ரீதியான பயணங்கள் என்று இறக்கை கட்டிக் கொண்டு பறப்பவருடன் உரையாடுபவர் அவருடைய கல்லூரிக் காலம் முதல் நண்பரான எம் ஆர் ஜம்புநாதன். பேட்டி இரண்டு பகுதிகளாக வெளி வரும். முதல பகுதி இன்று..
படித்தது அறிவியல் – சில வருடங்கள் பட்டயக் கணக்காளர் – தொழில் ரீதியாக 30 வருடங்களுக்கும் மேலாக ஐடி உலகம் –எப்படி நிகழ்ந்தது?
நினைத்துப் பார்த்தால் சுவாரஸ்யமானது., ஆனால் முரணானது என்று சொல்ல மாட்டேன்.. இயற்பியல் மாணவராக, ஒரு தத்துவார்த்த இயற்பியலாளராக (Theoretical Physicist) வேண்டும் என்பதே எனது கனவு. குடும்ப நிர்ப்பந்தங்கள் என்னை பட்டய கணக்கியலில் சேரச் செய்தன, எனது CA கல்வியின் போது எந்த தொழிலுக்கும் கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் (Controls- Checks and Balances) முக்கியமானவை என்பதை உணர்ந்தேன். கல்லூரியில் கற்ற இயற்பியல் கணினித் துறையைப் புரிந்து கொள்ள உதவியது. எப்பொழுது தொழில்- வணிகங்கள் எல்லாம் கணினி மயமாகினவோ, அப்பொழுது சி ஏ படிப்பினால் பெற்ற கட்டுப்பாட்டுக் கோட்பாடு பற்றிய தெளிவான புரிதலும் இணைந்து ஐ டி துறையில் வெகு இயல்பாக நம்பிக்கையுடன் பயணிக்க உதவியது.
சரி, பட்டயக் கணக்காளராக இருந்தவர் ஐ டி துணைகொண்டு நிறுவனத்தின் நடவடிக்கைகளைத் தணிக்கை (I T Audit) செய்யும் துறையில் வந்த ஆர்வம் பற்றி சொல்லுங்களேன்..
இன்றைய ஐசாகாவின் (ISACA) முன்னோடியான ஈடிபி ஆடிட்டர்ஸ் அசோசியேஷனில் (ஈடிபிஏஏ) பற்றிய தகவல்கள் அந்த கால கட்டத்தில் தான்- அதாவது 1984-85ம் வருட வாக்கில்- இந்தியாவுக்கு வந்த சேர்ந்தன. அமெரிக்காவில் 1969ல் துவங்கப்பட்ட இந்த அமைப்புதான் ஐ டி ஆடிட் துறைக்கு அஸ்திவாரம் இட்டவர்கள். இந்தியாவிலிருந்து அந்த அமைப்பின் உறுப்பினர்களாகச் சேர்ந்த முதல் இரண்டு நபர்களில் நானும் ஒருவன். அந்த அமைப்பின் சென்னைக் கிளையைத் (நம் நாட்டின் முதல் கிளை) துவக்குவதில் 1985-86 வருடங்களில் என் மூத்த CA சகாக்களுடன் சேர்ந்து நானும் பணியாற்றினேன். பின்னர் அமெரிக்க தலைமை நிலையம் இத்துறை தொடர்பான பாடத் திட்டத்தினை ஏற்படுத்தி சான்றிதழ் தேர்வு அறிமுகப்படுத்திய போது, அதில் வெற்றியடைந்தேன். அதற்கு என்னை ஊக்கப் படுத்திய, பல வகையிலும் உதவி புரிந்த என் மூத்த சகாக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
அதன் பின்…
சென்னை,கல்கத்தா, பெங்களூர் மற்றும் மும்பையில் உள்ள பெரும் உற்பத்தி நிறுவனங்களில் பணி புரிந்தேன். அடுத்தாக, தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இரண்டு வருடங்கள் பணி. பிறகு ஆறு வருடங்கள் ஜாம்பியாவில் ஒரு பெரிய ஆலோசனை அமைப்பின் தலைவராக பணியாற்றினேன். பின்னர் நான் சொந்த தொழில் தொடங்க முடிவெடுத்து 2003ல் வேலியண்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தைத் துவக்கினேன்..
ஆக, தொழில் – பணி ரீதியாக பெற்ற அனுபவங்களிலிருந்து கற்ற பாடம் என்று எதைச் சொல்வீர்கள்?
பள்ளி – கல்லூரியில் நாம் கற்றுக் கொள்வது தான் ஒரு மரத்தின் வேர்களைப் போன்றது. அந்த வேர்கள் வலுவாக இருக்கும் வரையில் எந்த திசையிலும் நாம் கிளைகளை விரிக்கலாம் இல்லையா?
தகவல் தொழில் நுட்ப பாதுகாப்புத் (சைபர் செக்கியூரிட்டி) துறையில் உலகளாவிய போக்குகள்– ஆலோசகராக– அமுல்படுத்துபவராக உங்கள் அனுபவங்கள், நிகழ்வுகள்..
இணைய பாதுகாப்பின் உலகளாவிய போக்குகள் என்று பார்த்தால் நாளுக்கு நாள் புதிய எல்லைகளையும் தொடுகின்றன- தாக்குதல்களின் வேகத்தையும் கூட்டுகின்றன. அழிவுச் சக்திகள் கோவிட் -19 போன்ற பேரழிவுக்கு காத்திருக்கின்றன. முன்னர் இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்டபோது இத்தகைய செயல்களைக் கண்டோம். இன்று கொரானா காலத்திலும் இத்தகைய வில்லன்களின் ஆட்டத்தைப் பார்க்கிறோம். ஒரு சாதாரண நாளில் நிகழ்த்தப் படும் சைபர் தாக்குதலைச் சமாளிப்பதில் வெற்றி வாய்ப்பு கூடுதல். ஆனால், அசாதாரண சூழ்நிலையில் நம் கவனம் மீட்புப் பணிகளில் இருக்கையில் , வெற்றிகரமான இணைய தாக்குதல்கள் எண்ணிக்கையிலும் அவை விளைவிக்கும் பாதிப்புகளின் அளவிலும் அதிகரித்துள்ளன. கோவிட் -19 காலம் உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களை குறிவைத்து கடுமையான ரான்சம்வேர் தாக்குதல்களைக் கண்டு வருகிறது. (ரான்சம்வேர் என்பது உங்கள் நிறுவனத்தின் இணையதளத்தை முடக்கி, உங்களைச் செயல்படவிடாமல் செய்து, பிறகு உங்களை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டும் செயல்கள்- நம் பிள்ளைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு பேரம் பேசுவார்கள் அல்லவா, அதன் சைபர் வடிவம் தான் இந்த ரான்சம்வேர்). இணைய அமைப்புகளைத் தாக்கும் – சேதப்படுத்தும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு பேரழிவுகள் பெரும்பாலும் சாதகமான நிலப்பரப்பாக இருக்கின்றன.
(மேலும் வளரும்)