‘‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தை வர்ணித்துப் பாடினார் நாமக்கல் கவிஞர். ஆகஸ்ட் 15, 1947ல் பாரத நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம் அப்படி அகிம்சை வழியில்தான் கிடைத்தது என்று நமது பள்ளிப்பாடத்தில் படித்திருக்கிறோம். அது உண்மையல்ல, நேதாஜி போன்ற தலைவர்களை விடுங்கள். காந்திஜியின் காங்கிரஸ் தொண்டர்களே அகிம்சையை முழுவதுமாக ஏற்கவில்லை.
ஆம் ‘வெள்ளையனே வெளியேறு’ கிளர்ச்சி 1942ல் ஏற்பட்டபோது, நாடெங்கிலும் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்தெழுந்தார்கள். ரயில் தண்டவாளங்களைத் தகர்த்தார்கள்; காவல் நிலையங்களை அடித்து நொறுக்கினார்கள். தடியடி நடத்திய ஆங்கிலேய காவல்துறை மீது பதில் வன்முறை நிகழ்த்தினார்கள். கிரிப்ஸ் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் 1942 ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தார் காந்திஜி. அடுத்த சில மணிநேரத்துக்குள் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
காந்திஜி நடத்திவந்த ‘நவஜீவன்’ பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து காவல்துறையினர் சூறையாடினார்கள். காந்திஜி சிறைக்குச் செல்வதற்கு முன்னால் ‘செய் அல்லது செத்து மடி’ என்றார். அதன் அர்த்தத்தை ஆங்கிலேயர்கள் திரிக்க முயன்றார்கள்.
பிரிட்டீஷ் அரசின் இந்திய விவகாரங்கள் அமைச்சராக இருந்த அமெரி என்பவர் பி.பி.சி. வானொலியில், “ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டில் வன்முறையை ஏவ காங்கிரஸ் சதி செய்கிறது” என்று குற்றம்சாட்டினார். காந்திஜியின் ஆசி வன்முறையாளர்களுக்கு உண்டு என சந்தேகத்தை எழுப்பினார். இவையெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களை ஆத்திரமடையச் செய்தது. அதன் விளைவாக, தேசமெங்கும் ‘ஆகஸ்ட் கிளர்ச்சி’ வெடித்தது.
நேரு, படேல், ராஜேந்திர பிரசாத், தீரர் சத்தியமூர்த்தி, காமராஜர் என நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். வட மாநிலங்களில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் அகிம்சை வழியிலேயே போராட்டம் நடந்தது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட சென்னை மாகாண கவர்னர் “சென்னை மாகாணத்தில் வன்முறைகள் எதுவும் நடக்காதது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். இந்தப் பேச்சு தமிழகத்திலும் வன்முறையை ஏவிவிட்டது. கோவை, திருவையாறு, குரும்பூர், கும்பகோணம், சீர்காழி, குலசேகரப்பட்டினம் என பல இடங்களில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன என்பது வரலாறு.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 80வது ஆண்டு இன்று.