வெளிநாட்டு நிதி கட்டுப்பாட்டுச் சட்டம்; 20,701 என்ஜிஓக்கள் உரிமம் ரத்து

சர்வதேச அளவில் `நிதியில்லை, பயங்கரவாதமும் இல்லை’ என்ற வாசகம் ஒலிக்காத இடமே இல்லை. பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கு நிதி வரத்து மூலகாரணமாக உள்ளது. இதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். நிதியை தடுத்து விட்டால் பயங்கரவாதத்தையும் வேரறுத்து விடலாம்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பயங்கரவாத நடவடிக்கைகளை அரங்கேற்றி வந்தது. இப்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் நன்கொடை பெற்றுக்கொண்டு பாரதத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்த அமைப்பு ஏவி விட்டுக் கொண்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டுச் சட்டத்தை தீவிரமாக அமலாக்கி வருகிறது. பத்தாண்டு காலத்தில் 20,701 என்.ஜி.ஓக்களின் (அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள்) உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரைமுறையின்றி நன்கொடை பெற்றுக்கொண்டு உள்நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்த
என்.ஜி.ஓக்களை களையெடுப்பதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டிய முனைப்பு அபாரமானது.
20,701 என்.ஜி.ஓக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதுமட்டுமல்லாமல் 14,396 என்.ஜி.ஓக்களின் உரிமங்கள் காலாவதியாகி விட்டன. அவற்றை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி நிலவரப்படி 16,242 என்.ஜி.ஓக்கள் மட்டுமே வெளிநாட்டு நன்கொடை பெறத் தகுதியானவை என்ற உரிமத்தை பெற்றுள்ளன. இவற்றின் மீதான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரப்படி 2019-–20 நிதியாண்டு முதல் 2021-–22 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் 13,520 என்ஜிஓக்கள் வெளிநாடுகளிலிருந்து ரூ.55,741.51 கோடி அளவுக்கு நன்கொடையைப் பெற்றுள்ளன. உரிமத்தை இழந்துள்ள என்ஜிஓக்களின் பட்டியலில் கொள்கை ஆய்வுக்கான மையம், ராஜீவ்காந்தி ஸ்தாபனம், ராஜீவ்காந்தி அறக்கட்டளை (இதில் சோனியா குடும்பத்தினர் முக்கிய பங்கு வகித்து வந்தனர்) ஆக்ஸ்பாம் இண்டியா ஆகியவையும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 10,003 என்.ஜி.ஓக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. 2011-–19 காலகட்டத்தில் பாரதத்திலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் வெளிநாட்டு நிதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் 2,575 என்.ஜி.ஓக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகியவை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குறைந்த அளவில் என்ஜிஓக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட மாநிலங்கள் என்ற வரிசையில் சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகியவை உள்ளன. ஜம்மு காஷ்மீரிலும் குறைந்த அளவே என்ஜிஓக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
எந்தெந்த என்ஜிஓக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். இதில் தொய்வுக்கோ, மெத்தனத்துக்கோ இடம் கொடுக்கக்கூடாது. பயங்கரவாதத்துக்கு நிதி இல்லை என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் நிரந்தர செயலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி முன்னெடுப்பை மேற்கொண்டார்.
வெளிநாட்டு நன்கொடையைப் பெற்று அதை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என சட்டங்கள் உள்ளன. அமெரிக்காவில் வெளிநாட்டு முகவர்கள் பதிவுச்சட்டம் அமலில் உள்ளது. வெளிநாட்டு நிதியைப் பெறுவதிலும் அதை பயன்படுத்துவதிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. வெளிநாட்டு நன்கொடையைப் பெற்றுக் கொண்டு உள்நாட்டில் அரசியலை கட்டுப்படுத்தக் கூடிய வகையிலோ அல்லது திசை திருப்பக் கூடிய வகையிலோ செயல்பட்டால் என்ஜிஓவின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிடும்.
கம்போடியாவில் 2015ம் ஆண்டே வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்று வரும் என்ஜிஓக்களைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. எவ்வளவு நிதி வந்துள்ளது? அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது? என்பது பற்றிய விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டியதும் அவசியம். நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது சட்டத்துக்கோ குத்தகம் ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்பட்டால் என்ஜிஓவின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
ரஷ்யாவில் வெளிநாட்டு முகவர் கட்டுப்பாட்டுச் சட்டம் 2012ல் கொண்டு வரப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தக் கூடாது. இதைப்போல பல்வேறு நாடுகளிலும் வெளிநாட்டு நன்கொடையைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்கள் அமலில் உள்ளன. எனவே பாரத அரசின் நடவடிக்கையை விமர்சிக்க முற்படுவது விவேகமானது அல்ல.

கட்டுரையாளர்: முதுநிலை ஆய்வாளர், சியாம் பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி மையம்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி