கோடை வெப்ப அலையால் உலகம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே தமிழகத்தில் வெப்ப நிலை 40° செல்சியஸ் நெருங்கிவிட்டது.
இந்த அதிவெப்ப நிலையால் ‘ஹீட் ஸ்ட்ரெஸ்’ எனப்படும் வெப்ப அழுத்தம் ஏற்படலாம். உடல் வலி, சோர்வு, தலைவலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, உயர் இரத்த அழுத்தம், படபடப்பு முதலியவை அதன் சில அறிகுறிகள். இதனால் அனைவரும் பாதிக்கப்படும்போதும், அதிகம் பாதிக்கப் படுவது என்னவோ குழந்தைகளும், வயதான வர்களும் தான். இவர்கள் நடுத்தர வயதினரை விட குறைந்த அளவில் நீர் பருகுவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.
சூட்டுக் கட்டி, வேர்க்குரு, படர்தாமரை உள்ளிட்ட தோல் நோய்களுக்கும் இக்காலத்தில் பஞ்சமில்லை. ஆனாலும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்களுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பெரிதாக குறைந்ததாகவும் தெரியவில்லை. வெப்பத்தில் இருந்து தப்பிக்க இவர்கள் கையாண்ட தவறான சில வழிமுறைகளே இதற்கு காரணம் எனலாம்.
குளிரூட்டப்பட்ட தண்ணீர், ஐஸ் கட்டிகள், ரோஸ் மில்க், ஃப்ரூட் மிக்ஸ், நிறமூட்டப்பட்ட கோலிசோடா, 10 ரூபாய் குப்பி குளிர்பானங்கள், அசுத்தமான ஐஸ் சேர்த்து செய்யப்படும் கரும்புச் சாறு, பழச்சாறு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். வெளியில் செல் பவர்கள் வீட்டிலிருந்து சுத்தமான குடிநீரை எடுத்து செல்வது நல்லது. மெல்லிய காற்றோட்டமான வெண்ணிற கதர் ஆடைகள் அணியலாம். நீர் பழங்களான தர்பூசணி, முலாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய், இளநீர், மோர், தயிர் ஆகியவற்றை உண்ணலாம். தண்ணீரை சேகரிக்க மண் பானைகளை பயன்படுத்தலாம்.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி
வரை அத்தியாவசியம் அல்லாத காரணங் களுக்காக வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கலாம். வெயிலில் பணியாற்றுபவர்கள் உரிய மாற்று வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுதல் முதலியன பின்பற்றலாம்.
அசைவ உணவுகள் மற்றும் உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை குறைத்துக் கொள்ள லாம். தேவைப்பட்டால் காலை, மாலை இருமுறையும் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல், தினமும் உச்சந்தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பது உடல் சூட்டைக் குறைக்க உதவும்.
வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உடனே உடலைக் குளிர்ச்சியாக்கும் பானங் களையோ உணவுகளையோ உட்கொள்வது நல்லதல்ல. இதனால் உடலில் ஏற்படும் திடீர் வெப்பநிலை மாற்றம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
குழந்தைகளை வெயில் அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே விளையாடச் செல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கோடை வகுப்புகளுக்குச் செல்பவர்களுக்கும் இது பொருந்தும். நாமும் நம்மைச் சார்ந்தோரும் இவற்றை பின்பற்றி நம் உடலை பாதுகாத்துக் கொள்வோம். முடிந்தால் பறவைகளுக்கும் சாலையோர விலங்குகளுக்கும் தண்ணீர் வையுங்கள், மரங்களை நடுங்கள். நம் அடுத்த தலை முறையேனும் வெப்ப அலையிலிருந்து தப்பிக்கட்டும்.