வெப்பம் வியாதி தரும் இந்த நுட்பம் தீர்வு தரும்

பொதுவாக நமக்கு வெயில் காலங்களில் குறைவாக தண்ணீர் அருந்துதல், அதிகப்படியான நீர் இழப்பு, அதிக சூடு, சிறுநீரை அடக்குவது, அதிக காரவகை உணவுகள், நொறுக்கு தீனிகள் உண்பது, நேரம் தவறி சாப்பிடுவது, காய்கறி பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து செயற்கை குளிர்பானங்களை குடிப்பது, இரவில் அதிக நேரம் கண் விழிப்பது, தலைக்கு எண்ணை தேய்க்காமல் இருப்பது, இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை நமக்கு வெய்யில்கால நோய்களை கொண்டுவந்து சேர்க்கும். அவற்றில் சில நோய்களையும் அவற்றிற்கு ஏற்ற சில எளிய இயற்கை உணவு, மருந்துகளுடன் அவற்றை வராமல் காப்பது எப்படி, வந்த பின்பு எளிமையாக தீர்ப்பது எப்படி என்பதை நாம் இங்கு காணலாம்.

தலைவலி:

இதற்கு அவ்வப்பொழுது தண்ணீர் அருந்துவது, வெயிலை தவிர்ப்பது, தினம் இருமுறை குளிப்பது அவசியம். தலைவலி வந்தால், நெற்றியில் ஈரத்துணி பற்று, நொச்சி இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடிப்பது, நன்றாக ஓய்வெடுப்பது போன்றவை செய்தால் தலைவலி பறந்துவிடும்.

சன் ஸ்ட்ரோக் எனப்படும் வெக்கை மயக்கம்:

இதன் முக்கிய காரணம் உடலில் நீர் குறைபாடுதான். எனவே இவர்கள் வெயிலில்  செல்லும்போது நிறைய தண்ணீர் , நீர்ச்சத்துள்ள காய்கறி பழங்களை எடுத்துகொள்ள வேண்டும். இவர்கள் தளர்வான வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவது முக்கியம். வெப்ப மயக்கம் ரத்தம் மூளைக்கு செல்ல ஏதுவாக தலையை தாழ்த்தி, கால்களை சிறிது உயர்த்தி படுக்கவைத்து, உடைகளை தளர்த்தி, உடலை குளிர்விக்க வேண்டும்.

சிறுநீரகக் கல்:

சிறுநீரை அடக்குவது,  அதிக உப்பு,  நொறுக்குத் தீனிகளை அளவிற்கு அதிகமாக உண்பது போன்றவை சிறுநீரகக் கல்லை ஏற்படுத்தும். நெருஞ்சிமுள், மூக்கிரட்டை, சிறுகண்பீழை போன்றவற்றை தினம் இருவேளை எடுத்துக்கொள்வது, பால், சர்க்கரை சேர்க்காத தேநீரை சிறிது பனங்கற்கண்டுடன்  அருந்துவது, வாழைத்தண்டு சாறு, கொத்துமல்லி, தனியா, சோம்பு, சீரகம், தேங்காய், நெல்லி போன்றவைகளை  பயன்படுத்துவது சிறுநீரகக் கற்களை கரைக்கும்.

பித்தப்பை கல்:

அதிக மசாலா, வறுத்த பொறித்த உணவுகள், அசைவ உணவுகள்,  சுற்றுப்புறச் சூழல், சிகரெட், போதை பழக்கவழக்கங்கள், கல்லீரல் அழற்சி போன்றவை பித்தப்பை கல்லை உருவாக்கும். கீழாநெல்லி  ஒரு சிறந்த கல்லுடைப்பான் மூலிகை.  மேலும் கரிசலாங்கண்ணி, வேம்பு, கற்றாழை, நுணா, இஞ்சி போன்றவற்றின் பயன்பாடும் பித்தப்பை கல்லுக்கு  நல்ல மருந்து.

நீர் கடுப்பு:

பெண்களுக்கு, அவர்களின் உடல் அமைப்பு, வேலைச் சுமை போன்றவை நீர்கடுப்புக்கு சில முக்கிய காரணங்கள்.  சிறுநீரை அடக்காமல் இருப்பது, பிறப்புறுப்புகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கம் போன்றவை மிக முக்கியம்.

நீர்கடுப்பு வந்தவர்கள் திரிபலா பொடி அல்லது மஞ்சள் உப்பு கலந்த நீரைக் கொண்டு அந்தரங்க உறுப்புகளை அடிக்கடி கழுவுவதுடன் தண்ணீர், கற்றாழை, நுங்கு, இளநீர், வெந்தயம், நீர்முள்ளி  போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி குறைபாடு:

சூரிய வெளிச்சத்தால்  நமக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின் டி,  கிடைக்காமல் போவதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை சூழ்நிலைதான். நம் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்ப வேண்டும். எந்த நேரமும் தொலைக்காட்சி, கணினி, மொபைல், டேப் போன்றவற்றை பயன்படுத்துவது, வீடு, கார், அலுவலகம் என  எப்பொழுதும் குளிர்சாதன வசதியுடன் இருப்பதைத் தவிர்க்கவும்.

அம்மை:

உடலை  சுத்தமாக பராமரிக்காதது, அதிகப்படியான சூடு,  நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவைதான்  பல அம்மை நோய்களுக்கு முக்கிய காரணம்.

உடலை சுத்தமாக பராமரிப்பது, அவ்வப்போது ஈரத்துணியால் உடலை துடைத்துக்கொள்வது, மாதம் இருமுறை விளக்கெண்ணை குடிப்பது அதிகப்படியான உஷ்ணத்தை தணிக்கும்.

தோல் வியாதிகள்:

படர்தாமரை, அரிப்பு, தோல் தடிப்பு, சொரியாஸிஸ் போன்ற பல்வேறு தோல் நோய்கள் நீங்க உள் ஆடைகளை சுத்தமாக பராமரிப்பது,  உடலில் உள்ள கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றுவது அவசியம்.

பயத்தம் மாவு, கடலை மாவு, முல்தானி மிட்டி, எலுமிச்சை, வேம்பு, மஞ்சள் போன்ற பொருட்களை கொண்டு குளிப்பது, கொய்யா இலை, மாவிலை, வேப்பிலை, நோச்சி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கொதிக்கவைத்து வடிகட்டிய நீரில் குளிப்பதுபோன்றவை மிக நல்ல பலனைத் தரும்.

தொற்று நோய்கள்:

கோடைகாலத்தில் அனைத்து கிருமிகளும் மிக வேகமாக வளரும். காலரா, டைபாய்டு, வாந்தி, சீதகழிச்சல் போன்ற வியாதிகளைத் தடுக்க  சுகாதாரமாக சுற்றுப்புறத்தை பராமரிப்பதுடன் நம்மையும் சுத்தமாகவும் பராமரித்துகொள்ள வேண்டும்.

மஞ்சள்காமாலை:

இது வெயில் காலங்களில் நம்மை அதிகம் தாக்குகிறது.  மசாலா, எண்ணெய் பதார்த்தங்கள், நொறுக்குத் தீனிகள், அசைவ உணவுகள்  இதற்கு ஒரு முக்கிய காரணம்.  தினமும் ஒருவேளை கீழாநெல்லியை ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்துகொள்வது, கரிசாலை எண்ணையை தலைக்கு தேய்த்து குளிப்பது, மாதம் இருமுறை உண்ணாவிரதம் இருப்பது போன்றவை நம் கல்லீரலை பலப்படுத்தும்.