வராது, வராது என்ற ஜல்லிக்கட்டு ஓடாது, ஓடாது என்ற காளை துள்ளிக்குதித்து வாடிவாசலிலிருந்து எகிறி ஓடியது.
மத்திய அரசே! உடனே நடவடிக்கை எடு! அவசர சட்டம் உடனே கொண்டுவா! பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான். இரண்டுமே தமிழினத் துரோகிகள் என்று நல்லவனையும் கெட்டவனையும் ஒன்றுபடுத்தி பேசிய உள்ளூர் கட்சிகளின் வாய் ஒரேயடியாக மூடிவிட்டது.
மாநில முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்று பார்த்து ஜல்லிக்கட்டு நடக்க அவசர சட்டம் போடக் கோரினார். பண்பாடு மிக்க பிரதமர் மோடியும், தமிழரின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டை நான் மதிக்கிறேன். நடைபெறச் செய்வேன். மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்” என்றார்!
முதல்வர் பன்னீர் செல்வம் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றார். அறிவித்து விட்டார். ஒருவாறு ஜல்லிக்கட்டு என்கிற தமிழர் ஹிந்து கலாச்சாரம் காப்பாற்றப்பட்டு, வீரவிளையாட்டு அரங்கேறிவிட்டது.
ஆனால் இது நிறைவேறுவதற்கு முன்பு நடந்தேறிய நிகழ்வுகள் என்ன? 2014 மே மாதம் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடைவிதித்து, காளையை காலாக்கிரகத்திற்கு அனுப்பி வைத்தது. 2 ஆண்டுகள், தமிழகத்தின் எந்தக் கட்சி இன்றைக்கு முழுவதுமாக ‘நான்தான் ஜல்லிக்கட்டின் காவலன் என்று மார்தட்டி, உச்ச நீதிமன்றம் தடைக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. தமிழக அரசும் கம்மென்று கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது.
இன்றைக்கு கேமராவை ஆப் பண்ணாமல் மெரினாவிலேயே தவங்கிடந்த எந்த ஊடகங்களும் வாயே திறக்கவில்லை! கெஜட் அறிவிக்கை வெளிநாட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு காளையை காலாக்கிரகத்திலிருந்து வெளியே அழைத்து வந்தது. ஒரே வாரத்தில் உச்ச நீதிமன்றம் மீண்டும் தடைவிதித்து, காளையை மீண்டும் காலாகிரகத்திற்கே அனுப்பி வைத்தது.
இதற்குப் பின்தான் தமிழக அரசு விழித்துக் கொண்டு மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தடையை விலக்கக் கோரியது.
இந்த சரித்திரத்தைக் கூறுவதன் நோக்கம் என்ன? முதல் 6 ஆண்டு காலம் திமுகவும் காங்கிரசும் ஜல்லிக்கட்டுக்கு சாவு மணி அடித்தது. அடுத்த 3 ஆண்டு காலம் அதிமுகவும் உச்ச நீதிமன்றமும் ஜல்லிக்கட்டுக்கு சங்கு ஊதியது. இதில் ஜல்லிக்கட்டை இன்னும் உயிரோடு வைத்திருக்க காரணம் பாஜகதான். இந்த உண்மையை மறைத்து, அவசர சட்டம் போடு! மத்திய அரசே தமிழினத்தை அழிக்காதே” என கோஷம் போடுவது யார்? தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் திமுக, காங்கிரஸ், அதிமுக கட்சிகள் தான். சரி! சப்ஜெட்டுக்கு வருவோம்!
சமூக வலைதளம், அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கக் கூட்டம் டெல்லிக்குப் பிறகு, ஒரு ஜகஜால புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியது உண்மைதான்! இப்போது தான்!
வாட்ஸ்அப்பும் இணையதளமும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி கூட்டம் சேர்த்தாலும், கூட்டத்தில் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை மட்டும் முன்னிறுத்தி வந்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு குறை, ஏதோ ஒரு மனத்தாங்கல், காயம், வடு, ரணம், தேவை, அவசியம், குறை, விழுதல் அவர்களிடம் இருந்ததால், என்ன தான் நடக்கிறது என பார்க்க அந்தந்த ஊர் மைதானங்களை நிறைத்தார்கள்.
ஆனால் இதை சாதகமாக்கிக் கொள்ள சில தீய சக்திகள் முயன்றன. அவர்கள் கூட்டத்தை சரிசெய்யும் வாலண்டியர் வேஷத்திலும் மைக் செட், நோட்டீஸ், கலை நிகழ்ச்சிகள் முகமூடிக் கொள்வதும் ஒளிந்து கொண்டார்கள். கூட்டம் சேர்ந்ததை பார்த்த சினிமாக்காரர்கள், ஏற்கனவே இவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்ற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். தேசியக் கொடியை அவமதிக்க முயன்றவர்கள் சரி செய்யப்பட்டனர். ஆனாலும் தேசியக் கொடியை தலை கீழாக பிடிக்கவும் தேச விரோத கோஷங்களும் போடப்பட்டன.
ம.க.இ.க என்ற கம்யூனிஸ்ட் இயக்கம், RSVI என்ற நக்ஸலைட் இயக்கம், மே 17 என்னும் LTTE ஆதரவாளர், SDPI என்னும் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்கள், இயல்பாகத் திரண்ட கூட்டத்தை காசாக்க நினைத்தார்கள். மோடி மீது அமிலம் வீசினார்கள். அவர் படத்துக்கு செருப்பு மாலை போட்டு தொப்பி போட்ட ஒரு இளைஞன் ஸ்கூட்டரின் மேல் நின்று போஸ் கொடுத்தான். பின்லாடனை பூஜிக்கும் போஸ்டர் ஒட்டிய வாகனத்தில் வந்த இவன், ஜல்லிக்கட்டு ஆதரவாளனாம்! இப்படி முகங்களை மறைத்துக் கொண்டாலும் முகமூடி உண்மையை கக்கியது.
வலைதளம், அலைகடலாக மாறியது. சாலை ஓரங்களில், ஊர் சந்திப்புகளில், சிறு சிறு பதாதைகளோடு உண்மையான எண்ணத்துடன் சேர்ந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.
இரண்டு திராவிடக் கட்சிகளும் வேண்டாம்; ஊழல் வேண்டாம் என்ற ஆழத்தின் அதிருப்தி, கூட்டத்தில் பேசியவர்களின் குரலிலே தெரிந்தது. மோடிக்கு எதிராக இந்த கூட்டத்தினரை மாற்றும் முயற்சி, கலந்துகொண்ட நடுநிலையாளர்களால் முறியடிக்கப்பட்டது. மோடிய விமர்சித்து தயாரித்த பதாதைகளை கையில் கொடுத்தபோது வாங்க மறுத்தனர். மோடிக்கு எதிராக பேசியவர்களை நடுவிலேயே நிறுத்த வைத்தனர்.
இதெல்லாம் இருக்கட்டும். ஒரு டிவி சேனல் தமிழக உறுப்பினர்களை ஏற்றி, இறக்கி, உணவு கொடுத்து ராப்பகலாக உழைத்துக் கொண்டிருந்தது. மத்திய அரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட பதாதைகளை லோடு லோடாக இறக்கி வினியோகித்துக் கொண்டிருந்தது. ஹுமாயூன் கபீர் என்னும் SDPI ஊழியரும் உமா மகேஸ்வரி என்னும் நக்ஸலைட் ஆதரவாளரும் அலங்காநல்லூரில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது அடித்து விரட்டப்பட்டனர்.
தமுமுக சார்பில் மெரினாவில் காலை, மாலை 5,000 பிரியாணி பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டன. இப்படி நடந்தேறிய மாணவர் எழுச்சி அல்லது மக்கள் எழுச்சி போராட்டத்தில் பலனை அறுவடை செய்ய எண்ணிய புல்லுருவிகள் மக்களால் உருவி வீசப்பட்டனர்.
கடைசி நாளில் எந்த மாணவரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளரும் விடுக்காத பந்த் அழைப்பை, அரசியல் கட்சிகள் விடுத்து லாபம் சம்பாதிக்க நினைத்து ஏமாந்து போயினர். விவசாய தற்கொலை, ஊழல் சாம்ராஜ்யம், குடும்ப ஆட்சி, ஓடாத காவிரி என எண்ணற்ற பிரச்சினைகள் என்ன நோவு என்பதை சொல்லத் தெரியாமல் அழும் குழந்தை போல கூடியது இளைஞர் கூட்டம்.
இந்த சோஷியல் மீடியா கூட்டிய கூட்டம் வெற்றிக் கூட்டமாக எண்ணிக்கையில் மாறியது உண்மைதான். இதே பலத்தை பலன் தரும் வண்ணம் செயல்புரியும் கூட்டமாக மாற்ற முடியுமா?
இனி வரும் காலங்களில் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டி பிரச்சினைகள் அடிப்படையில் ஆளும் வர்க்கத்துக்கு அழுத்தம் தரமுடியுமா?
காட்டாற்று வெள்ளம் போல வந்து போனதுதான் இக்கூட்டம் விட்டுச் சென்ற பதிவா?
சோஷியல் மீடியாவால் எப்போதுமே இப்படி கூட்ட முடியுமா என்பதெல்லாம் நம்முன் உள்ள கேள்வி.
இதற்கு பதில் தேவையா? பலன் தேவையா என்பதும் நம்முன் தோன்றும் எண்ணம்!
வினவுங்கள் விடை கிடைக்கும்! செயல்படுங்கள் பலன் கிடைக்கும்.