பாரத விடுதலைப்போரில் மகத்தான தியாகம் செய்தவர்களுள் முக்கியமானவர் ஆனால் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டவர் ‘வீர சாவர்க்கர்’ எனப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர். புரட்சியாளர், சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை உடையவர் சாவர்க்கர். அபிநவ பாரத சங்கம் முதல் ஹிந்து மகாசபா வரை, அவரது அரசியல் பயணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது.
ஆங்கிலேயரின் சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக முழங்கிய தீரர் சாவர்க்கர். மதன்லால் திங்ரா என்ற மாவீரன் லண்டனில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்று பாரத்ததின் சுதந்திர தாகத்தை அந்நாட்டு மக்களுக்கு புரியவைத்தார். அதற்கு பின்புலமாக இருந்த சாவர்க்கர் கைது செய்யப்பட்டு பாரதத்திற்கு அனுப்பப்பட்டார்.
அப்போது கப்பலில் இருந்து தப்பி பிரான்ஸ் கடற்கரையில் ஏறிய அவரை பிரிட்டீஷ் காவலர்கள் துரத்தி வந்து கைது செய்தனர். ஆங்கிலேய அரசு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது சகோதரர்கள் இருவரும் கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதானார்கள். சாவர்க்கர் அந்தமானில் கொடுமையான செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டார். பயங்கர சித்ரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்தார். பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார்.
பட்டியலின மக்களுக்கான ஆலயம் அமைத்தல், தீண்டாமை எதிர்ப்பு, மதமாற்ற எதிர்ப்பு, வரலாற்று ஆய்வு என சமூக சீர்திருத்தத்திலும் கவனம் செலுத்தினார் சாவர்க்கர். மகாத்மா காந்தி கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பிறகு குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இங்கு கூறப்பட்டுள்ள தகவல்கள் சாவர்க்கரை மிகச்சிறிய அளவில் மட்டுமே அறிமுகப்படுத்தும். அவரது வாழ்வே ஒரு வேள்வி. அவரது வாழ்வை முழுமையாக அறிய, அவர் எழுதிய நூல்களையும் அவரைப் பற்றிய உண்மையை கூறும் நூல்களை இளைய தலைமுறையினர் படித்தறிய வேண்டும்.
வீரசாவர்கரின் நினைவு தினம் இன்று