தீபாவளியை முன்னிட்டு, வீட்டு காஸ் சிலிண்டர் முன்பதிவு அதிகரித்து வருகிறது. இதனால், வீட்டு சிலிண்டர் வினியோகம் வழக்கத்தை விட கூடுதலாக, 2 லட்சம் வரை அதிகரித்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.40 கோடி வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏஜன்சிகள் வாயிலாக தினமும் சராசரியாக, 3.50 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை வரும், 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், பலரும் சிலிண்டர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, தற்போது வழக்கத்தை விட தினமும் கூடுதலாக, 2 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தீபாவளியால் வழக்கத்தை விட சிலிண்டர் முன்பதிவு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப சிலிண்டர்கள் பதிவு செய்ததில் இருந்து, ஒன்றரை நாட்களுக்குள் வினியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக, ஞாயிற்று கிழமைகளிலும் பெரும்பாலான ஏஜன்சிகள் செயல்படுகின்றன. தற்போது, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மட்டும் ஒரு லட்சம்; மற்ற இரு நிறுவனங்களும் சேர்த்து ஒரு லட்சம் என, மொத்தம் இரண்டு லட்சம் சிலிண்டர்கள் தினமும் கூடுதலாக வினியோகம் செய்யப்படுகின்றன.