புதுச்சேரி பட்ஜெட்டில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “10 ஆண்டுகள் பணி செய்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் இல்லாத நிலை நீக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 2022-ம் ஆண்டு வரையிலான ரூ.13.80 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயத்தைப் பொறுத்தவரை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 2022ம் ஆண்டு வரையிலான ரூ.13.80 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். தனியார் பங்களிப்புடன் விரைவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படும். அமுதசுரபி, கான்பெட், பாண்டெக்ஸ் போன்றவை தற்போது ஊதியம் தரமுடியாத நிலையில் உள்ளது. ரூ. 30 கோடி ஒதுக்கி தந்து இவற்றை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏஎப்டி, சுதேசி, பாரதி மில்கள் நலிநடைந்துள்ளது. அதன் தொழிலாளர்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி வளர்ச்சிக்கு தொகுதி தோறும் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்படுவர். மரபணு குறைப்பாடு உள்ள குழந்தைகளின் பராமரிப்பு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். என்.ஆர்.எச்.எம் ஊழியர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு டீசல் லிட்டருக்கு ரூ.12 மானியம் தரப்படும். கட்டிட நல வாரியம் வழங்கி வரும் திருமண உதவித்தொகை ரூ.7 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மகப்பேறு உதவி ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஈமச்சடங்கு நிதி ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாகவும், மருத்துவ உதவித்தொகை ரூ. 500ல் இருந்து ரூ. 2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதய பிரச்சினை உள்ளோருக்கு ரூ. 1 லட்சமும், சிறுநீரக பிரச்சினை உள்ளோருக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். கட்டடத் தொழிலாளர் நல வாரிய பயனாளிகளின் பிள்ளைகள் 1 முதல் 8 வரை ஆண்டுக்கு ரூ.1000, 9,10ம் வகுப்புகளுக்கு ரூ.1,500, 11,12ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆட்டோ நலவாரியம் அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை 70 முதல் 80 வயது வரை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவர்” என தெரிவித்தார்.