விவசாயி வருவாய் இருமடங்கு ஆக இது ஒரு இனிய வழி

 

சகட்டுமேனிக்கு சாக்லேட் விழுங்குவது சர்வதேச அளவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு நகரமயமாக்கலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி இந்திய சாக்லேட் சந்தையின் மதிப்பு ரூ. 11,256 கோடி. இதில் காட்பரீஸின் பங்கு 48.6 சதவீதம். காட்பரீஸை, மோண்டலஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனினும் காட்பரீஸ் என்றால்தான் நுகர்வோருக்கு எளிதில் புரிகிறது. காட்பரீஸுக்கு நெஸ்லேயின் பங்கு 12.8 சதவீதம். மூன்றாவது இடத்தில் உள்ள பெரிரோவின் பங்கு 7.8 சதவீதம். இவை தவிர அமுல், காம்கோ, லவிட் உள்ளிட்ட பிராண்டுகளும் மக்களிடையே பிரபலமாக உள்ளன.

சாக்லேட் உற்பத்திக்கு தேவைப்படும் பிரதான கச்சாப்பொருள் கோகோ. இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 30,000 டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 18,920 டன் கோகோதான் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய கோகோ வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கோகோவுக்கு மாற்றாக பலா உள்ளிட்டவற்றை உள்ளீடாக பயன்படுத்தலாம் என்பது பரீட்சார்த்த நிலையில் உள்ளது. எனினும் இது இன்னும் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படவில்லை. உலகத்திலேயே ஐவரிகோஸ்ட் நாடுதான் கோகோ உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 15,81,000 டன் கோகோ உற்பத்தி ஆகிறது. இதற்கு அடுத்தபடியாக கானா நாட்டில் 7,78,000 டன் கோகோ விளைகிறது.

இந்தியாவில் கோகோ உற்பத்தியில் ஆந்திரா முதலிடத்திலும் கேரளா இரண்டாவது இடத்திலும் கர்னாடகா மூன்றாவது இடத்திலும் தமிழ்நாடு நான்காவது இடத்திலும் உள்ளன. ஆந்திராவில் 7,000 டன்னும் கேரளாவில் 6,500 டன்னும் கர்னாடகாவில் 2,200 டன்னும் தமிழ்நாட்டில் 1,500 டன்னும் கோகோ விளைந்துள்ளன. இவை தவிர வடகிழக்கு மாநிலங்களான அசாமிலும் நாகாலாந்திலும் ஓரளவு கோகோ பயிரிடப்பட்டுள்ளது. கோகோவுக்கு நிழல் தேவை. எனவே தனிப்பயிராக கோகோவை பயிரிடுவது தவிர்க்கப்பட்டு விடுகிறது. தென்னந்தோப்பு, பாக்குத்தோப்பு, ரப்பர் தோப்பு ஆகியவற்றில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்யப்படுகிறது.

1980களிலும் 90களிலும் கோகோவை பயிரிட ஊக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் செம்மையான செய்நேர்த்தி முறைகள் அக்காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்

படாததால் கோகோ சாகுபடியில் ஈடுபட்டவர்கள் இழப்பை சந்திக்க நேரிட்டது. ஆனால் இப்போது நிலமை முற்றிலும் மாறிவிட்டது. செய்நேர்த்தி முறைகள் சிறப்பாக உள்ளன. ஆதாயமும் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் தென்னந்தோப்பிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 30,000 லாபமாக பெற முடியும். விலை உயர்ந்தால் இது மேலும் அதிகரிக்கும். இதே தென்னந்தோப்பிலிருந்து கோகோ மூலம் கூடுதலாக ரூ. 30,000 பெறமுடியும். எனவே விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிவருகிறார். இதற்கு கோகோ ஊடு பயிர் சாகுபடியும் உதவும் என்பது திண்ணம்.