விவசாயிகளை ஒருங்கிணைந்த சக்தியாக உருவாக்கும் பாரதி கிசான் சங்கம்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை தேச நலனை கருத்தில் கொண்டு ஜாதி வேறுபாடுகள், அரசியல் முரண்பாடுகள் மறந்து, இமயம் முதல் குமரி வரை அவ்வாறே அட்டக் முதல் கட்டக் வரை விவசாயிகளை ஒருங்கிணைந்த சக்தியாக உருவாக்கும் பாரதிய கிசான் சங்கம் பற்றி அறிவோம்…

நமது நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி இருப்பதால், விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்து பணியாற்ற வேண்டும் என்ற யோசனையை 1967ல், அன்றைய ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் பரமபூஜனீய மாதவ சதாசிவ கோல்வல்கர் (குருஜி) நாக்பூர் மாநாட்டில் யோசனையை முன்வைத்தார். அதனை ஏற்று விதர்ப்ப சங்கச்சாலக் பாபுராஜ் ஜீ பேட், விவசாயிகள் மத்தியில் ஒரு குழுவை ஏற்படுத்தி, பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரபிரதேஷ் மாநிலங்களில் சங்கத்தை சேர்ந்தவர்கள் விவசாயிகள் மத்தியில் ஒரு குழுவாக பணியாற்றி வந்தனர்.
1975ல் அவசரநிலை அகற்றிய பின்பு, சங்கத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி தத்தோபந்த் தெங்கடி ஜி, 1979 மார்ச் 4ல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் “பாரதிய கிசான் சங்கம்” என்ற இயக்கத்தை விவசாய அமைப்பாக துவக்கினார்.
செயல்பாட்டு முறை:
‘விவசாயிகள் வேதனை தீர்க்கப்பட வேண்டும்’ என்று நினைத்து, அனைத்து விவசாயிகளின் நலனுக்காக உழைக்கிறது. எந்தவொரு தனிமனிதரின் தலைமையில் இல்லாமல், குழுத்தலைமையை மையமாகக் கொண்டே இயக்கம். நம் கோஷம், “ஒவ்வொரு விவசாயியும் நம் தலைவன், நீயே உன்னை முன்னேற்றிக்கொள்”.
பாரதிய கிசான் சங்கத்தின் நோக்கங்கள்:
“விவசாயிகளின் நலனும், தேச நலனும் ஒன்றையொன்று இட்டு நிரப்புபவை” என்ற தேசிய எண்ணம் ஒரு விழிப்புணர்வாக விவசாயியிடம் தோன்றச் செய்தல். தேச முன்னேற்றத்தின் அடிப்படை அமைப்பு “கிராமம்” ஆகும். ஆகையால் கிராமத்தின் அடிப்படையைக் கருத்தில் கொண்டு, சமுதாயத்தின் அனைத்து அங்கங்களிலும் “நாம் ஒரே குடும்பத்தினர்” என்ற எண்ணத்தை உண்டாக்குதல். அதன் மூலம் ஒருவர் மற்றொருவரைப் புரிந்து கொள்ளுதல்.
விவசாயிகளிடையே ஜாதி வேறுபாடுகள், அரசியல் வேறுபாடுகள் ஆகியவற்றை ஒழித்து, விவசாயியின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துதல். விவசாயிகளை சமுதாய மட்டத்தில் மேலே உயர்த்துவதற்கும், அவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்கும், கிராமத்தில் இருந்து ஜில்லா வரை, மாதாந்திரக் கூட்டம், பயிற்சி முகாம் ஆகியவை நடத்துதல். தேசிய உணர்வு நிறைந்த விவசாயச் செயல் வீரர்களைக் கொண்ட, தூய்மையான, அரசியல் சார்பற்ற அமைப்பை நிலைநாட்டுதல். அந்நிய பன்னாட்டு நிறுவனப் பொருட்களை நிராகரித்து, சுதேசியே இந்நாட்டுக்குத் தீர்வு என்று தெளிவாகச் செயல்படுத்துதல். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, நாடு முழுவதும் பயிற்சி முகாம்கள் நடத்துவது.
தமிழகத்தில் பாரதிய கிசான் சங்கம்:
1995ல், மதுரையை மையமாக வைத்து பதிவு செய்து, பாரதிய கிசான் சங்கம் துவங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 28 மாவட்டங்களில் செயல்படுகிறது. கடந்த ஆண்டு உறுப்பினர் சேர்க்கையின் போது, 25
ஆயிரம் உறுப்பினர்கள் தமிழகத்தில் இணைந்துள்ளனர். 31 ஆண்டு செயல்பாட்டில், கிசான் சங்கம் தமிழகத்தில் ஆறு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளது. விவசாயிகளை தலைவர்களாக உருவாக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பயிற்சி முகாம் நடத்துகிறது.
டெல்டா மாவட்டங்களில் பருத்தி மற்றும் பாசிப்பயிறு கொள்முதல் தடைபட்டு வந்தது. கிசான் சங்கம் தலையிட்டு, கொள்முதலை துரிதப்படுத்தி அதற்கான பணத்தை நான்கைந்து நாட்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வர ஏற்பாடு செய்தது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல் மற்றும் சிறு பிரச்சினைகளை கிசான் சங்கம் முன்னெடுத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உண்டான பணத்தை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க கிசான் சங்கம் வெற்றி கண்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து தாலுகா அலுவலங்களிலும், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்திட கிசான் சங்கம் வலியுறுத்தியதால், தற்போது அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு கிளைகளிலும் பலராமர் ஜெயந்தி, கோமாதா பூஜை, பாரதமாதா பூஜை, கிசான் சங்க ஸ்தாபன தினம் ஆகிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. வருடம் ஒரு முறையாவது விவசாயிகளிடையே விழிப்புணர்வு உண்டாக்க, 15 நாள் விழிப்புணர்வு இயக்கம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நடத்தப்படுகிறது. இவ்வாண்டு, பசுவினம் காக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும், இயற்கை விவசாய முறைகளை தொடர்ந்து காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட உள்ளது.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளுக்காக விவசாயிகளை விழிப்புணர்சி செய்வதன் பொருட்டும், அரசின் கவனத்தை கவரும் பொருட்டும், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள்,
சைக்கிள் யாத்திரைகள், பொதுக்கூட்டங்கள், தீர்மானங்கள் நிறைவேற்றுதல் ஆகியவை நடந்து வருகின்றன.
சங்கத்தின் சாதனைகள்:
1984ல் பருத்தி விலை ஒரு பேரளுக்கு 500 ரூபாய் இருந்தது, போராடி ரூ.650 பெற்றுக் கொடுத்தது.
2014க்கு முன்னர் வெறும் நான்கு விவசாய விளைபொருட்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) மத்திய அரசு அறிவித்தது. 2014க்கு பின்பு பாரதிய கிசான் சங்கத்தின் அழுத்தத்தினால், மத்திய அரசு 22 விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) அறிவித்தது.
1991−92ல், குஜராத் அரசு மாநில விவசாய மின்இணைப்பு கட்டணத்தை உயர்த்தியது. கிசான் சங்கம் மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலிலும் எதிர்த்துப் போராடியது. காந்தி நகரில் 50 ஆயிரம் பெண்களைக் கொண்ட, 5 லட்சம் விவசாயிகளுடன் பேரணி நடத்தியது. இதற்கு செவி சாய்த்த குஜராத் அரசு, மின் கட்டண உயர்வை ரத்து செய்தது. அதற்கு பின்பு நடந்த மாநில தேர்தலில், அந்த அரசு தூக்கி எறியப்பட்டது.
2013ல், டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு லட்சம் விவசாயிகளை திரட்டி, அப்போதைய மன்மோகன்சிங் அரசாங்கத்திடம், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 160 உயர்த்த கோரிக்கை வைத்து, வெற்றி பெற்றது. அதுவரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5 அல்லது ரூ.10 உயர்த்தி வந்தது மத்திய அரசு.
கிசான் சங்கம் எடுத்த முயற்சியினால், மத்திய அரசு 50 சதவீத கட்டணச் சலுகைகள் கொண்ட கிசான் ட்ரெயின் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விவசாயிகள், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்ல உடான் (UDAAN) விமானப் போக்குவரத்து திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
கிசான் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று, 2019 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு வருடம் தோறும் ரூ.6000 மூன்று தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது.
2024 செப்டம்பர் மாதத்தில், மத்திய விவசாயத்துறை மந்திரி சிவராஜ் சிங் சௌஹானை சந்தித்து, 13 அம்ச கோரிக்கையை கிசான் சங்கம் வைத்தது. அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, உணவு எண்ணெய் உற்பத்தியில் பாரதம் தன்னிறைவு அடைய மற்றும் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க 13,000 கோடி ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை மத்திய அரசு அறிமுகப்படுத்த முன் வந்தது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, இத்திட்டத்தை கைவிட மத்திய அரசிடம் கோரியது. இதனால் மத்திய அரசு, விதை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டது.
2016ல் தென்னை விவசாயம் நலிவுற்ற நிலையில் இருந்தது. தென்னைக்கு விலை கிடைக்காமல், விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். கிசான் சங்கம் 2,000 தென்னை விவசாயிகளை திரட்டி பொள்ளாச்சியில் மாநாடு நடத்தியது. அதுவரை கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 55 இருந்ததை உயர்த்தி, ரூ. 65 அறிவித்து தென்னை விவசாயிகளை காப்பாற்றினர்.
அகில பாரத அளவில் 572 மாவட்டங்களில், 50 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்படுகிறது, பாரதிய கிசான் சங்கம் நாடு முழுவதும் 1 லட்சம் கிராமங்களில் செயல்படுகிறது.

கட்டுரையாளர்: தேசிய துணைத் தலைவர், பாரதிய கிசான் சங்கம்