மூன்று லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதி நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு நிகழும் நிதியாண்டு முதல் 2024 – 25ம் நிதியாண்டு வரை 3 லட்சம் ரூபாய் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி மானியம் அதிகரிப்பு, வேளாண் துறையில் தொடர்ந்து கடன் வழங்குவதை உறுதி செய்யும் என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் நிதிநிலையையும் சாத்தியத் தன்மையையும், உறுதி செய்யும். குறுகிய கால வேளாண் கடன் என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி வளர்ப்பு, மீன்வளம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் கிடைக்கும் என்பதால், வேலைவாய்ப்பு உருவாகவும் இது வழிவகுக்கும். மேலும், உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டிவிகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும்.