விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்

“ஹிந்து அல்லாதோர் பிரவேசிக்கத் தடை” -என்ற வாசகத்தைத் தாங்கிய அறிவிப்புப் பலகைகள் பல கிராம எல்லைகளில் திடீரென முளைத்தன. அந்தச் செய்தி வெளியானதுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. உடனடியாகக் களத்திற்குச் சென்று விசாரணை நடத்துமாறு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரைப் பணித்தார் காவல்துறைத் தலைமை இயக்குநர்.

இந்த இரண்டு பத்திகளையும் படித்த பிறகு உங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கலாம். இவ்வளவு நடந்தும் நமக்குத் தெரியாமல் போனதே என்று. அவசரம் வேண்டாம். இதெல்லாம் நடந்தது தமிழகத்தில் அல்ல. ஒரு வட மாநிலத்தில்.

ஹிமயத்தைக் கிரீடமாக அணிந்த மாநிலம், மலைகளும், மலைப் பிரதேச வனங்களும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம்.

இந்த மாநிலத்திற்குள் அடி எடுத்து வைக்காமல் ஹிந்துக்களின் தீர்த்த யாத்திரை பூர்த்தி ஆவதில்லை. ஆண்டு முழுவதும் யாத்ரீகர்கள் இங்கே வந்த வண்ணம் இருப்பர்.

ஆம், கேதார்நாத் பத்ரிநாத் உள்ளிட்ட புண்ய ஸ்தலங்கள் பலவற்றின் இருப்பிடம் இது. புண்ய நதிகளான கங்கை, யமுனை உற்பத்தி ஆவதும் இங்கேதான். அதனாலயே “உத்தரகண்ட்” பிரதேசத்தை “தேவ பூமி” என்று அழைக்கிறோம்.

அப்பேர்ப்பட்ட உத்தரகண்ட் மாநிலம், ருத்ர ப்ரயாக் மாவட்டத்தின், கேதார் பள்ளத்தாக்கில் ஓரிரு கிராம எல்லைகளில் “ஹிந்து அல்லாதோர் பிரவேசிக்கத் தடை. மீறினால் அபராதம்” என எச்சரிக்கைப் பலகை வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

அப்படி என்னதான் நடந்தது?

லவ் ஜிஹாத், பெண்கள் மான பங்கம், கோயில்களில் சிலைத் திருட்டு, உள்ளூர்த் தொழில் பாதிப்பு என ஏராளமான குற்றச்சாட்டுகள்.

மய்கண்டா, ராம்பூர் ஃபடா, ந்யாள்ஸு, படாஸு, ரவி கிராம், ஷெர்சி, அரியா, ஜாமு, ஸோன் ப்ரயாக், கௌரி குண்ட், த்ரியுகி நாராயண் உள்ளிட்ட பல கிராமங்கள் இத்தகையக் கட்டுப்பாட்டை விதித்திருந்தன.

“யாத்திரிகர்களை நம்பியே நாங்கள் பிழைக்கிறோம். யாத்திரை நாட்களில் கேதார்நாத் செல்லும் கிராமத்து ஆண்கள், யாத்திரை முடிந்தே திரும்பி வருவார்கள். அந்தக் காலத்தில் எங்கள் பெண்கள், சிறுமியரின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை.”

“சமீபத்தில் அடையாளம் தெரியாத தெருவோர வியாபாரிகள் பலர் கிராமத்தில் நுழைகின்றனர். அவர்களது சொந்த ஊரிலும், காவல் துறை
யிடமும் விசாரித்த பின்னரே நாங்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கிறோம்” என்கிறார் ராம்பூர் ஃபடா கிராமத் தலைவர் பிரமோத் சிங்,

உண்மையில் “ஹிந்து அல்லாதோர்” என்று மட்டுமா அதில் குறிப்பிட்டு இருந்தார்கள்? இல்லை, “ரோஹிங்யா முஸ்லிம்கள், தெருவோர வியாபாரிகள்” அவர்களுக்கும் சேர்த்து தான் அந்தத் தடை இருந்தது.

இதெல்லாமே கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் சம்பவங்கள், வைக்கப்
பட்ட பலகைகள். செப்டம்பர் தொடக்கத்தில் சில முஸ்லிம் அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி.

கடைசியில் காவல்துறையின் கடும் வற்புறுத்தலின் பேரில் அந்த எச்சரிக்கைப் பலகையில் இருந்த “ஹிந்து அல்லாதோர்” என்ற வார்த்தை “அன்னியர்கள்” என்று மாற்றப்பட்டது. “ரோஹிங்யா முஸ்லிம்கள்” என்ற வார்த்தை நீக்கப்பட்டது.