அனைத்து மதத்தவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம்” கொண்டுவரப்படும் பட்சத்தில், மக்களிடையே மதத்தின் அடிப்படையில் எழுந்துள்ள வேறுபாடு அகன்று, நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சமம் என்ற மனநிலை ஓங்கும்.
தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிப்போம் என்று பாஜக தெரிவித்திருந்தபடி, கடந்த வாரம் மத்திய சட்டத் துறை, பொது சிவில் சட்டத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பது குறித்தும் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் தனது அறிக்கையை வழங்குமாறு சட்ட கமிஷனை கேட்டுக்கொண்டுள்ளது.
பலதார மணம், மூன்று முறை தலாக் சொல்வதன்மூலம் விவாகரத்து போன்ற பெண்ணடிமை சம்பிரதாயங்கள் இதன்மூலம் ஒழியும். முஸ்லிம் பெண்களும் தங்களுக்கு அருகில் வசிக்கும் ஹிந்துப் பெண்களைப்போல முழு சுதந்திரம் பெற்று வாழ வகைசெய்யும் இம்முயற்சிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டமும் தனது 44வது ஷரத்து மூலம் ஊக்கம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத விமானப் படைக்கு சுதேசி ‘தேஜஸ்’!
போர் விமானங்களுக்காக பிறநாடுகளை ஏன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்? நாமே ஏன் இவற்றை தயாரிக்கக்கூடாது? என்ற கேள்விகளுக்கு தக்க பதிலை அளித்துள்ளது நமது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ). முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரான தேஜஸ் போர் விமானம், ஜூலை 1ம் தேதி, நமது விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த போர் விமானம், 3,500 கிலோ எடையுள்ள குண்டுகளை தாங்கிச்சென்று, 300 முதல் 350 கி.மீ. தொலைவு வரையிலான இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் பெரும் சக்தி வாய்ந்திருப்பது நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவை வாயைப் பிளக்கவைத்துள்ளது. நமது எல்லைக்கு அருகில் 350 கி.மீ. தொலைவு வரை அமைந்துள்ள இந்நாடுகளின் முக்கிய நகரங்களை நமது விமானப்படையின் தேஜஸ்ஸின் வீச்சில் வருகின்றன என்ற செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அயல்நாடுகளில் இருந்து போர் விமானங்களை பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதில் முந்தைய காங்கிரஸ் அரசின் கைக்கூலிகள் லஞ்சம் பெற்றுவந்தனர். உள்நாட்டிலேயே விமானம் தயாரித்தால் எங்கே தங்களது வருமானம் நின்றுபோய் விடுமோ என்ற பயத்தால், ஒவ்வொரு முறையும் ஏதாவது இடையூறுகளை உருவாக்கிக் கொண்டே வந்தனர். இனி நமது அந்நிய செலாவணியை இழந்து, அயல் நாடுகளிடமிருந்து போர் விமானங்கள் வாங்குவது குறைந்து, நமது பொதுத்துறை நிறுவனமே அவற்றை தயாரிக்கும்.
நேரு அரசு மீது அமித் ஷா
கொலைக் குற்றச்சாட்டு
ஜூன் 28 அன்று டெல்லியில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆய்வு மையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமீத் ஷா, ஜன சங்கத்தை நிறுவிய முக்கர்ஜியின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் கூறினார்.
அந்தக் காலகட்டத்தில், காஷ்மீருக்குள் நுழைய வேண்டுமானால், அதற்கான சிறப்பு அனுமதி (பெர்மிட்) வாங்கியிருக்கவேண்டும். இதை எதிர்த்து, பெர்மிட் வாங்காமல் காஷ்மீருக்குள் நுழைய போராட்டம் செய்யும்வகையில் அங்கு சென்ற முகர்ஜியை, பிரதமர் நேருவின் ஆணைக்கிணங்க கைது செய்தது காஷ்மீர் அரசு. உடல் நலிவடைந்தநிலையில், அருகில் இருந்த ஒரு மகப்பேறு மருத்துவமனையில் அவரை மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் வசதி செய்து தராமல், ஒரு பழுதடைந்த ஜீப்பில் அவரை உட்கார வைத்தே அழைத்துச் சென்ற பாவச்செயலை செய்தது அந்த அதிகாரிகள்தான். அங்கு பணிபுரிந்த ஒரு செவிலியர் தந்த தகவலின்படி, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், ஒரு மருந்தை ஊசி மூலம் அவருக்கு செலுத்த அங்கிருந்த செவிலியர் உத்தரவிடப்பட்டார். அதையடுத்து, முகர்ஜி உயிரிழந்தார். நேரு அரசு சரியான விசாரணை மேற்கொண்டிருந்தால், முகர்ஜி இறப்புக்கான காரணம் தெரிந்திருக்கும். எனவேதான், அவரை சதி செய்து கொன்றவரே நேரு தான் என்று குற்றம் சாட்டத் தோன்றுகிறது என்று பேசினார் அமீத் ஷா.
பாரத வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பரிவுடன் அரவணைத்து தேற்றும் சிறுவன் பெயர் சோனு. அப்பா பெயர் மெகபூப். டெல்லியில் வசிக்கிறார். இந்த 13 வயது சோனுவை 7 ஆண்டுகளுக்கு முன்னால் சிலர் பங்களாதேஷுக்கு கடத்திச் சென்று விட்டார்கள். அங்கே கொத்தடிமையாக வளர்ந்திருக்கிறான். அக்கம்பக்கத்துகாரர்களில் ஒருவர் இவனது டெல்லி வீட்டு விவரம் தெரிந்துகொண்டு, டெல்லி சென்றபோது, பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்.
அவர்கள் வெளியுறவுத் துறையை நாடினார்கள். சுஷ்மா ஸ்வராஜின் நேரடி மேற்பார்வையில் சோனுவின் மீட்புப் பணி சுறுசுறுப்பாக நடந்தது.
பங்களாதேஷ் அரசு சோனுவை பாரத தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதையடுத்து, டெல்லிக்கு திரும்பி அழைத்து வரப்பட்ட சோனு பெற்றோருடன் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தான்.
சோனுவும் அவன் தாயும் கண் கலங்கியபடி அமைச்சரை பாதம் தொட்டு வணங்கினார்கள்.