விதி மீறிய 5 என்ஜிஓ-க்கள்: எப்சிஆர்ஏ உரிமம் ரத்து

விதிகளை மீறியதால் நாட்டில் உள்ள 5 அரசு சாரா அமைப்புகளின் (என்ஜிஓ) வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட (எப்சிஆர்ஏ) உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவிலுள்ள அரசு சாரா அமைப்புகளுக்கு வரும் நிதி, நன்கொடை தொடர்பான வரவுகளை கண்காணிக்கும் சட்டம்தான் இந்த எப்சிஆர்ஏ சட்டமாகும்.
இந்த சட்ட விதிமுறைகளை இந்தியாவிலுள்ள 5 அரசு சாரா அமைப்புகள் மீறியுள்ளதைத் தொடர்ந்து அதன் உரிமங்களை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. சர்ச் ஆஃப் நார்த்இந்தியா (சிஎன்ஐ-எஸ்பிஎஸ்எஸ்),வாலன் டரி ஹெல்த் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (விஎச்ஏஐ), இந்தோ-குளோபல் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (ஐஜிஎஸ்எஸ்எஸ்), சர்ச் ஆக்ஸிலரி ஃபார் சோஷியல் ஆக் ஷன்(சிஏஎஸ்ஏ), இவாஞ்சலிக்கல்ஃபெலோஷிப் ஆஃப் இந்தியா(இஎஃப்ஓஐ) ஆகிய அமைப்புகளின் எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகள் அனைத்தும் எப்சிஆர்ஏ விதிமுறைகளை மீறிச் செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் எப்சிஆர்ஏ விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அப்போது ராஜீவ் காந்தி பவுண்டேஷன் (ஆர்ஜிஎஃப்) உள்ளிட்ட என்ஜிஓ-க்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.