நம் நாட்டில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும், வன்முறைகளை, பிரிவினையை தூண்டும் பதிவுகள், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி சமூக ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களவையில், புல்லி பாய் போன்ற செயலிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘தவறு இழைக்கும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சமூக ஊடகங்களை பொறுப்பேற்க வைப்பது அவசியம். அதற்காக, சமூக ஊடகங்களின் விதிகள் வலுப்படுத்துவதும் அவசியம். நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், சமூக ஊடகங்களுக்கு மேலும் கடுமையான விதிகளை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது. நாட்டு மக்களுக்காக அதை செய்ய வேண்டியது அவசியம்’ என்று கூறினார்.