விண்வெளி வளர்ச்சி நாயகன்

ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டி போட்டுக்கொண்டு விண்வெளியில் ரேஸ் நடத்திக் கொண்டிருந்த பரபரப்பான சூழல். அடுத்து இங்கிலாந்தும் பிரான்ஸும் முயற்சி எடுத்துத் தோற்றிருந்த சமயம். இயற்பியல் விஞ்ஞானியான விக்ரம் சாராபாய் இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். கடற்கரை ஊரான தும்பாதான், பாரதத்தில் இருந்து புவியின் சுற்றுப்பாதை நோக்கி ராக்கெட்டுகளைச் செலுத்த சரியான இடம் என்பதைத் கணக்கிட்டார். ஸ்ரீஹரிகோட்டாவையும் விக்ரம் சாராபாய்தான் கண்டுபிடித்தார்.
1963-ல் நவம்பர் 21ல் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நைக் – அப்பச்சே எனும் ஒலியியல் ராக்கெட்தான் இந்தியாவின் முதல் விண்வெளிக் கனவுத்திட்டம். அன்றைய தினம் ராக்கெட்டின் பாகங்களைக் கொண்டு செல்லவிருந்த லாரி தாமதித்த போது, விக்ரம் சாராபாய் தன் சக விஞ்ஞானிகளோடு சைக்கிள் கேரியரிலும், மாட்டு வண்டியிலும் அவற்றைச் சுமந்துசென்று – ராக்கெட் செலுத்தும் மேடையில் பொருத்தினார். 1967-ல் இந்தியாவிலேயே தயாரான ரோகிணி வகை ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அடுத்தடுத்து ரோகிணி-100, ரோகிணி-125, ரோகிணி- 300, ரோகிணி- 560 என அவரது காலம் இந்திய விண்வெளி இயலை உலகத்தரம் வாய்ந்த பொற்காலமாக்கியது. அகமதாபாத்தில் IIM எனும் இந்திய மேலாண்மைக் கழகத்தை உருவாக்கினார். பாரதம் மருத்துவத் துறை மருந்துகளையும் மருத்துவக் கருவிகளையும் சுயமாகத் தயாரிக்க வழிவகுத்தார்.
இன்று உலக அளவில் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இ.எஸ்.ஏ ஆகியவற்றை அடுத்து இஸ்ரோ மூன்றாவது பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனமாக மதிக்கப்படுகிறது. அதன் அஸ்திவாரத்தைச் சாதித்த விக்ரம் சாராபாய் பாரத விண்வெளியியலின் தந்தை எனப் போற்றப்படுவதில் ஆச்சர்யமில்லை. முதல் இந்தியச் செயற்கைக்கோளை வடிவமைப்பது குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் எட்டுமணி நேரக் கலந்துரையாடலை நிகழ்த்திய இரவில் அதே தும்பாவில் உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.