விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீர மங்கை

ஆங்கிலேயனை எதிர்த்து நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பிரபலம் ஆகாதவர்கள் ஏராளம். அவற்றில் ஒருவர் ‘குயிலி’ என்ற இளம்பெண்.

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி வந்த ஆங்கிலேயன் சிவகங்கையையும் கைப்பற்றினான். இழந்த பகுதியை மீட்க அதன் ராணி வேலு நாச்சியார் தொடர்ந்து போராடி வந்தார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சின்னமருது, பெரிய மருது, வேலு நாச்சியார் மூவரும் சேர்ந்து சிவகங்கையை மீட்க போர் தொடுத்தனர். வேலுநாச்சியார் தலைமையில் பெண்கள் படை உருவாகியிருந்தது. அதில் பதினெட்டே வயதான குயிலியும் ஒருவர். அவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் இரவு வேலு நாச்சியாரைக் கொல்ல வந்த சதிகாரர்களை எதிர்த்துப் போராடி, வேலு நாச்சியாரை காப்பாற்றினார். அதனால் வேலு நாச்சியார் குயிலியை தனது மெய்க்காப்பாளராக நியமித்திருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, வேலு நாச்சியார் படைக்கும் ஆங்கிலேயப் படைக்கும் போர் மூண்டது.  போரில் வெற்றி பெற குயிலி ஒரு திட்டம் தீட்டினார். ஒரு இடத்தில் ஆங்கிலேயன் ராணுவ ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தான். குயிலி தன் உடல் முழுவதும் நெய்யைப் பூசிக்கொண்டு கையில் தீப்பந்தத்துடன் அந்த ஆயுத கிடங்கில் குதித்தார். அவ்வளவுதான்… அங்கிருந்த அத்தனை ஆயுதங்களும் வெடித்துச் சிதறின. ஆயுதங்களைப் பறிகொடுத்த ஆங்கிலேயன் புறமுதுகிட்டு ஓடினான். சிவகங்கை வேலு நாச்சியார் வசமாகியது. குயிலி நெருப்போடு நெருப்பாக சாம்பலானார். குயிலி மட்டும் அந்த ஆயுதக் கிடங்கை நாசம் செய்யாமல் இருந்தால் சிவகங்கையை மீட்பது கனவாகவே ஆகியிருக்கும்.

குயிலியின் தியாகத்தை அறிந்த வேலு நாச்சியாரும் படையினரும் கண்ணீர் வடித்தனர். உலகின் முதல் பெண் போராளி ‘குயிலி’ என்றால் மிகையாகாது.

மகாத்மா காந்தி, நேரு போன்றோர்களின் தியாகம் மகத்தானது என்றால் ‘குயிலி’ போன்றோரின் தியாகமும் மகத்தானதுதான்.

இந்த விஜயதசமி நன்னாளில் தான் இச்சம்பவம் நடந்தது. ஆகவே இந்நாளில் நாம் அவரை மனதில் நிறுத்தி புகழ்மாலை சூட்டுவோம்!

 

*** எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள் ***