ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து விலகியே உள்ளன. இதனால், இந்த நாடுகளில் இருந்து ரஷ்யா செல்லும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, தங்களுடன் நெருக்கமாக உள்ள நாடுகளில் இருந்து அதிக சுற்றுலா பயணியரை ஈர்க்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து வழக்கத்தைவிட அதிகளவு சுற்றுலா பயணியரை கவர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளைச் சேர்ந்தோர் பயனடையும் வகையில், விசா இல்லா புதிய பயண ஒப்பந்த திட்டத்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து, தலைநகர் மாஸ்கோவின் துணை மேயர் எவ்கனி கோஸ்லோ கூறியதாவது:
கடந்த ஆண்டில் சுற்றுலா பயணியருக்கான சிறந்த இடமாக மாஸ்கோ மாறியுள்ளது. இந்தியாவில் இருந்து மட்டும் 60,000க்கும் அதிகமானோர் இங்கு வருகை தந்துள்ளனர்.
இது, முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகம். இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி ஆகியவை மாஸ்கோவிற்கான சிறந்த சுற்றுலா சந்தைகளாகும்.
அந்த நாடுகளில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, விசா இல்லா பயண ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.