விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட வேண்டும்

ஓடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள வி.ஹெச்.பி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே, “விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஸ்தாபன நாள் மற்றும் பாரதத்தின் சுதந்திர அமிர்த மஹோத்சவ நிகழ்ச்சிகளில் ஹிந்து சமுதாய மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். பழங்குடியின சமூகத்தினரிடையே பணியாற்றிய ஹிந்துத்துவா மீது பக்தி கொண்ட சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கையை ஒடிசா அரசு விரைவில் பகிரங்கப்படுத்த வேண்டும். சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதியின் தியாகம் வீண் போகாது. பூஜ்யபுரி சங்கராச்சாரியார் ஸ்ரீ நிச்சலானந்த் சரஸ்வதி ஜி மஹராஜின் உருவ பொம்மையை எரித்து அவரை அவமதித்த கம்யூனிஸ்டுகள் மற்றும் பிற ஹிந்து விரோதிகளை கைது செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 9ம் தேதியை ஆதிவாசி திவாஸ் (பூர்வீக மக்கள் தினம்) என கொண்டாடுவதில் எந்த நியாயமும் இல்லை. பாரதத்தின் பழங்குடி சமூகம் எப்பொழுதும் மற்ற ஹிந்து சமுதாயத்துடன் இணைந்து பாடுபட்டு, நாடு, மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக சபதம் எடுத்து வருகிறது. பிர்சா முண்டா பிரபுவின் பிறந்தநாளான நவம்பர் 15ம் தேதியை ‘ஜன்ஜாதி கௌரவ் திவஸ்’ (பழங்குடியினரின் பெருமை தினமாக) கொண்டாட வேண்டும். ஒடிசாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் பெரிய அளவில் மதமாற்ற சதிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை ஒடிசா அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ஜார்கண்ட் வழியாக மேற்கு வங்காளத்திற்கு பசு சந்ததி கடத்தப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 60வது நிறுவன தினத்தையொட்டி, ஒரு லட்சம் கிராமங்களுக்கு வி.ஹெச்.பி  செயல்பாடுகளை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் வி.ஹெச்.பி ஆதரவாளர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என விஎச்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.