சேலத்தில் தி.மு.க சார்பில், தி.மு.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, “தமிழ்நாட்டில் நாங்கள் எல்லாம் சாதாரண ஆள். எங்கள் அனைவரையும் உருவாக்கிய கட்சி தி.மு.க. எண்ணற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கியுள்ளது. தி.மு.க.,வைக் கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் விசுவாசமாக இல்லாமல் நாங்கள் வேறு யாருக்கு விசுவாசமாக இருப்போம்? அதன் அடிப்படையில் தன் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. உதயநிதி அல்ல, அவரது மகன் இன்பநிதி வந்தாலும் நாங்கள் ஆதரிப்போம். வாழ்க என்று தான் சொல்வோம். அது தான் எங்களுடைய எண்ணம். வாரிசு அரசியல் என்று காட்டியெல்லாம் நீங்கள் எங்களை மிரட்ட முடியாது” என கூறியுள்ளார். அவரது இந்த வெளிப்படையான பேச்சு சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதுடன் கிண்டலடிக்கப்பட்டும் வருகிறது.