வாராணசி நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து கியான்வாபி மசூதி வளாகவியாஸ் மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைகள் தொடங்கின.
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் பிரபல வியாஸ் குடும்பத்தின் மகள்வழி பேரனான சைலேந்தர் குமார் பாதக், கடந்த ஆண்டு இறுதியில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் காசி விஸ்வநாதர் கோயிலின் சிறிய மண்டபம் (வியாஸ் மண்டபம்) கியான்வாபி மசூதியை ஒட்டி அமைந்துள்ளதால் அதனை மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தசாமியா மசூதி அறக்கட்டளையினர் ஆக்கிரமிக்கும் அச்சம் இருப்பதாக கூறியிருந்தார். இந்த மனுக்களை, சிங்காரக்கவுரி அம்மன் வழக்கை விசாரிக்கும் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் விஸ்வேஸ்வர் விசாரித்தார்.
வழக்கின் முதல் மனுவில், வியாஸ் மண்டபத்தின் பொறுப்பாளராக வாராணசி மாவட்ட ஆட்சியரை நியமித்து ஜனவரி 17-ல் உத்தரவிட்டடார். இரண்டாவது மனுவில் வியாஸ் மண்டபத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1993-ல் நிறுத்தப்பட்ட பூஜையை மீண்டும் தொடங்க நேற்று முன்தினம் அனுமதி அளித்தார். வழிபாட்டுக்காக பக்தர்கள் வந்து செல்லும் வசதியை காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையுடன் சேர்ந்து மாவட்ட நிர்வாகம் ஒரு வாரத்துக்குள் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், போலீஸாருடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்தார். அவரது உத்தரவின்படி கியான்வாபி மசூதியை ஒட்டி அமைந்த வியாஸ் மண்டபத்தின் இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து தினமும் 5 வேளை பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. முதல் பூஜை நள்ளிரவு நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வியாஸ் மண்டபம் கியான்வாபி மசூதியின் அடித்தளத்தில் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இது உண்மையல்ல என்றுத் தெரியவந்துள்ளது.
மசூதி வளாகத்தில் உள்ள ஒசுகானாவின் பின்புறம் சுமார் 20 அடி இடைவெளி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. தொழுகை நடத்தும் மசூதியானது,ஒசுகானாவிற்கு முன்புறம் அமைந்துள்ளது. சுமார் 6 அடி உயரமேடையில்அமைந்த மசூதியின் வளாகத்தில் ஒசுகானாவின் பின்புறத்தின் அடிப்பகுதியில்வியாஸ் மண்டபம் அமைந்துள்ளது.அதாவது தொழுகைக்கு தலைமை ஏற்கும் மவுலானா நிற்கும் கிப்லா எனும்இடத்திற்கு தென்கிழக்கு மூலையின் கீழ்பகுதியில் மண்டபம் அமைந்துள்ளது.
சுமார் எட்டு அடி அகலமும், 30 அடிநீளமும் கொண்ட இந்த சிறிய மண்டபத்துக்கான வாசல், காசி விஸ்வநாதர் கோயிலின் வாசல் எண் 4 வழியாக உள்ளது. இந்த கோயிலின் இடதுபுறம் உள்ள மசூதியை பார்த்தபடி ஒரு நந்தி சிலையும் உள்ளது. இதன் எதிரிலுள்ள தரைத்தளத்தில் இருந்து 3 அடி கீழே இறங்கி வியாஸ் மண்டப வாசலில் நுழையவேண்டி இருக்கும்.
இந்த அடித்தள மண்டபம், வாராணசியின் பிரபல பரம்பரையில் ஒன்றான வியாஸ் குடும்பத்தினர் பொறுப்பில் இருந்தது. இப்பரம்பரையின் மூத்தவரான வியாஸ், கடந்த 1936-ல் ஆங்கிலேயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். இதில் அனுமதிக்கு பிறகு வியாஸ் மண்டபத்தில் அன்றாட பூஜைகள் தொடங்கின.
அயோத்தியில் பாபர் மசூதி 1992-ல் இடிக்கப்பட்ட பிறகு ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங், இந்த மண்டபத்தை 1993-ல் மூடி விட்டார்.கியான்வாபியை ஒட்டி இருப்பதால் பாதுகாப்பு காரணமாக மூடப்படுவதாக அவர் தெரிவித்தார். எனினும் வியாஸ் பரம்பரையினர் வருடத்தின் முக்கிய 3நாட்களில் இந்த சிறிய மண்டபத்தில் பூஜைகள் நடத்தி வந்துள்ளனர். 2016-ல் பிரதமர் மோடியால் காசி விஸ்வநாதர் கோயில் புனரமைக்கப்பட்டது. அப்போது, அக்கோயிலின் அறக்கட்டளையிடம் வியாஸ் பரம்பரையினர் அந்த மண்டபத்தை விலைபேசி ஒப்படைத்து விட்டனர்.
இதில்தான் முன்புபோல் பூஜை நடத்த வாராணசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனுள், யோனிபட்டா வடிவிலான 2 சிவன் சிலைகள், 3 அனுமன்சிலைகள் உள்ளன. இதில் ஒன்று உடைந்து சிதைந்துள்ளது. இத்துடன் விநாயகர், விஷ்ணு, மகரம் ஆகிய 3 சிலைகள் என மொத்தம் 8 சிலைகள் உள்ளன. இதற்கான சம்ஸ்கிருத கல்வெட்டும் உள்ளே பதிக்கப்பட்டுள்ளது. அடித்தளம் என்பதால் இருட்டை நீக்க உள்ளேதற்போது விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் அஞ்சுமன் இன்தசாமியா மசூதி அறக்கட்டளை இணைச் செயலாளர் சையத் முஹமது யாசின் கூறும்போது, “நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் எங்கள் தொழுகைக்கு எந்த இடையூறும் இல்லை. சமூக வலைதளங்களில் சில சமூக விரோதிகள் இப்பிரச்சினையில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். கியான்வாபி மசூதி தொடர்பான பிற வழக்குகளுக்கும் வியாஸ் மண்டப பிரச்சினைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.