பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 14-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு மீண்டும் வாராணசி வருகிறார். மே 21-ல் பாஜக மகளிர் அணி நடத்தும் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த மாபெரும் கூட்டம், உத்தரபிரதேசத்தின் சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இந்த பழமையான கல்வி நிறுவனம், பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியில் உள்ளது. இக்கூட்டத்தில், கிழக்கு உ.பி.யில் மீதம் இரண்டு கட்ட மக்களவைத் தொகுதிகளின் பெண் வாக்காளர் திரளாக கலந்து கொள்கின்றனர். இக்கூட்டம் நடத்தும் பொறுப்பு பாஜக மகளிர் அணியிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக மகளிர் அணியின் பொறுப்பு செயலாளர் அர்ச்சனா மிஸ்ரா கூறும்போது, “பிரதமர் வேட்புமனு தாக்கலுக்காக இந்த முறை நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பெண்கள் கூடி நின்று ஆர்ப்பரித்தனர். இதைக் கண்டு பிரதமர் மோடிக்கு உதித்த யோசனையின் பேரில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அனைத்து ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே செய்ய உள்ளனர்” என்றார்.
பாஜகவின் இந்த வித்தியாசமான பிரச்சாரக் கூட்டத்திற்காக அதன் பெண் நிர்வாகிகள் பலரும் நேரடியாக அழைப்பிதழ் விநியோகித்து வருகின்றனர். இக்கூட்டத்தில் வாராணசி மட்டுமின்றி அதன் சுற்றுப்புற மக்களவைத் தொகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களை பங்கேற்கச் செய்ய முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம், பாஜக மகளிர் அணியினரும், பெண் நிர்வாகிகளும் தமக்கு கிடைத்த முதல் வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி கட்சித் தலைமையிடம் பாராட்டை பெறவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.