வாராணசியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மோடி அமோக வெற்றி பெறுவார்: அண்ணாமலை கருத்து

உத்தர பிரதேசம் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இதற்கு முன்பும் நாம் பிரதமரின் தொகுதிகளை பார்த்திருக்கிறோம். வாராணசி நகரம் முற்றிலும் மாறிவிட்டது என அப்பகுதி மக்கள் தற்போது பெருமிதத்துடன் கூற முடியும். பிரதமர் மோடி தனது தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை உண்மையாக செய்திருக்கிறார். பிரதமரால் தனது தொகுதிக்கு என்ன செய்ய முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார்.

இந்த முறை வாராணசி தொகுதியில் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். வாராணசி தொகுதியில் அவர் செய்ததுபோல் மற்ற எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் செய்ய வேண்டும் என அவர் உறுதிப்பட தெரிவிக்கிறார்.

 

பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது. இது பிரதமர் மோடியின் தேர்தல் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். ஓட்டு அவருக்குத்தான். மும்பை போன்ற பெருமையான நிதித் தலைநகரம், கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலிலும் பிரதமருக்கு உறுதுணையாக நின்றுள்ளது.

அதனால் 2024-ம் ஆண்டு தேர்தல் வேறுமாதிரியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. மும்பையில் பாஜக மற்றும் தே.ஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறுவதை மீண்டும் ஒருமுறை பார்க்க போகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.